சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வாக்காளர் மனநிலையைப் புரட்டிப் போட்டுள்ள நிலையில், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ரவி வெளியிட்டிருந்த கருத்துக் கணிப்பு மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழக வெற்றிக் கழகம் 41 சதவீத வாக்குகளைப் பெற்று 121 தொகுதிகளில் முன்னிலை பெறும் என அவர் முன்கூட்டியே கூறியிருந்த நிலையில், தற்போதைய வாக்கு எண்ணிக்கை போக்கு அந்த கணிப்பை ஓரளவு உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

தேர்தலுக்குப் பிறகு 234 தொகுதிகளையும் உள்ளடக்கி நடத்திய ஆய்வின் அடிப்படையில் அவர் வெளியிட்ட தகவல் தொடக்கத்தில் பலருக்கும் ஆச்சரியமாகத் தோன்றியது. ஒவ்வொரு தொகுதியிலும் ஓய்வு பெற்ற காவல்துறையினர் தலா பத்து பேர் வீதம் பணியமர்த்தப்பட்டு, மொத்தம் 2,340 பேர் இந்த ஆய்வில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொருவரும் சுமார் 100 வாக்காளர்களைச் சந்தித்து கருத்துகளைச் சேகரித்தனர். இதன் மூலம் மொத்தமாக 2.34 லட்சம் வாக்காளர்களின் மனநிலை பதிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

சேகரிக்கப்பட்ட தரவுகள் செயற்கை நுண்ணறிவு கருவிகளும், வழக்கமான புள்ளிவிவர ஆய்வும் கொண்டு பகுப்பாய்வு செய்யப்பட்டதில், தமிழக வெற்றிக் கழகத்துக்கு 41 சதவீத ஆதரவு இருப்பது தெரியவந்ததாக ரவி தெரிவித்திருந்தார். மேலும், அந்தக் கட்சி 121 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கணித்திருந்தார். அதோடு, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளின் பாரம்பரிய வாக்கு வங்கியில் பெரிய அளவில் சிதறல் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டியது.

மண்டல வாரியான கணிப்பிலும் தவெகவுக்கு கணிசமான ஆதரவு இருப்பதாக கூறப்பட்டது. சென்னையில் அந்தக் கட்சிக்கு மிகப்பெரிய செல்வாக்கு இருப்பதாகவும், கொங்கு மண்டலத்தில் திமுக, அதிமுக, தவெக மூன்றும் கடும் போட்டியில் இருப்பதாகவும், தென் மாவட்டங்களில் கலவையான நிலை காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டது. மேலும், இளைஞர்கள், பெண்கள், சிறுபான்மையினர், மீனவர் சமூகத்தினர் ஆகியோரிடம் விஜய்க்கு ஆதரவு அதிகரித்திருப்பதாகவும் அந்த ஆய்வு விளக்கியது.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வரும் சூழலில் தமிழக வெற்றிக் கழகம் 107 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆட்சியை அமைக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், ரவியின் கணிப்பு கள நிலவரத்துடன் பெரிதும் ஒத்துப்போகிறதா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

இந்தக் கருத்துக் கணிப்பு வெளியான போது, பலரும் அதன் சாத்தியக்கூறு குறித்து சந்தேகம் எழுப்பியிருந்தனர். ஆனால் தற்போதைய முன்னிலை நிலவரம், அந்த ஆய்வு சாதாரண கணிப்பு அல்ல, துல்லியமான அரசியல் வாசிப்பு என்பதைக் காட்டுகிறதோ என்ற விவாதத்தை கிளப்பியுள்ளது. இறுதி முடிவுகள் வெளியாகும் வரை முழு நிலைமை உறுதி செய்ய முடியாதபோதிலும், விஜய் தலைமையிலான தவெக தமிழக அரசியலில் புதிய அலை எழுப்பியிருப்பது மட்டும் தெளிவாகியுள்ளது.