சென்னை:
தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ளது. இதை முன்னிட்டு திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக ஆகியவை நான்கு முனை போட்டிக்கு தயாராகியுள்ளன.
இதற்கிடையில் நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் தணிக்கை சான்றிதழ் விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். இதையே வைத்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்வினை தெரிவித்துள்ளார்.
சீமான் கூறியதாவது:
“நாங்கள் நடித்த அடங்காதே படம் முடக்கப்பட்டது. அப்போது ‘நீ மதத்தை காத்து மனிதனை கொல்ல நினைக்கிறாய்; நான் மனிதனை காத்து மதத்தை கொல்ல நினைக்கிறேன்’ என்ற வசனத்தையும் 500 இடங்களில் வெட்டிவிட்டனர். எந்த அரசும் தனக்கு எதிரான கருத்துகளுக்கு குரல்வளையை நெரிக்கிறது.
முதலமைச்சர் ஸ்டாலின் ஜனநாயகன் படத்திற்காக குரல் கொடுக்கிறார். ஆனால், தரையில் உண்மையில் போராடும் ஆசிரியர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் குறித்து எதற்கும் கவலைப்படுவதில்லை. பகுதி நேர ஆசிரியர்கள் சம்பளம், நிரந்தரம், சம ஊதியம் கேட்டு போராடுகிறார்கள். அவர்களை அடக்க முயற்சிக்கிறார்கள். அதை பற்றி யாரும் பேசுவதில்லை,” என்று சீமான் குற்றம்சாட்டினார்.
அவர் மேலும் கூறினார்:
“நான் தரையில் உள்ள ஜனநாயகன் பற்றி கவலைப்படுகிறேன். திரையில் வரும் ஜனநாயகன் பற்றி முதலமைச்சர் கவலைப்படுகிறார். பள்ளி, கல்லூரியில் அரசியல் பேசக்கூடாது என்று சொல்கிறவர்கள், அங்கு சினிமா பேசக்கூடாது என்றும் சொல்ல வேண்டாமா? பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் இல்லாத நிலை. நாட்டை எங்கே கொண்டு போகிறீர்கள்?” என சீமான் கேள்வி எழுப்பினார்.