நூக்:
அமெரிக்கா கிரீன்லாந்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில், கிரீன்லாந்து அரசியல் கட்சிகள் ஒன்றுகூடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
“நாங்கள் அமெரிக்கர்களாக இருக்க விரும்பவில்லை. கிரீன்லாந்து மக்களாகவே இருக்க விரும்புகிறோம்” என அந்த நாட்டை சேர்ந்த ஐந்து முக்கிய அரசியல் கட்சிகள் ஒருமித்த அறிக்கையை வெளியிட்டுள்ளன.
டிரம்ப் முன்னதாக கூறியிருந்தார்:
“அமெரிக்கராக பிறப்பது என்பது வரலாற்றின் லாட்டரியில் வெற்றி பெறுவது போன்றது.”
இதற்கு பதிலாக கிரீன்லாந்து மக்கள், “அப்படியான லாட்டரி எங்களுக்கு தேவையில்லை. எங்கள் எதிர்காலத்தை நாங்களே தீர்மானிப்போம்,” என பதிலளித்துள்ளனர்.
🌍 கிரீன்லாந்து – டிரம்பின் ஆக்கிரமிப்பு ஆசை?
கிரீன்லாந்து தீவின் மக்கள் தொகை சுமார் 57,000 பேர் மட்டுமே. சென்னையின் தி.நகர் பகுதியில் வாழ்பவர்களின் எண்ணிக்கைக்கும் இதைவிட அதிகம். ஆனாலும், இந்த சிறிய தீவை கைப்பற்றும் ஆசையில் டிரம்ப் முன்வந்துள்ளார்.
இதற்குக் காரணம், கிரீன்லாந்தில் உள்ள இயற்கை வளங்கள் மற்றும் கனிமச் செல்வம் தான். காலநிலை மாற்றத்தால் பனிப்பாறைகள் உருகி, புதுப்புது கனிமங்கள் வெளிப்பட ஆரம்பித்துள்ளன. இதை அமெரிக்கா தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் டிரம்ப் பேசிவருவதாக கூறப்படுகிறது.
🇬🇱 “எங்கள் எதிர்காலம் எங்கள் கையில் தான்” – கிரீன்லாந்து கட்சிகள்
கிரீன்லாந்து கட்சிகள் வெளியிட்ட அறிக்கையில்,
“கிரீன்லாந்தின் எதிர்காலத்தை அதன் மக்களே தீர்மானிக்க வேண்டும். நாங்கள் டென்மார்க்கியர்களாகவோ, அமெரிக்கர்களாகவோ இருக்க விரும்பவில்லை,”
என்று தெரிவித்துள்ளன.
மேலும், “அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு மனப்போக்கை நிறுத்த வேண்டும். எங்கள் நாட்டின் நிலை குறித்து எங்களுக்கே தீர்மானிக்கும் உரிமை வேண்டும்,” என்று வலியுறுத்தியுள்ளன.
🇩🇰 தற்போதைய நிலைமை
தற்போது கிரீன்லாந்து, டென்மார்க் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. கல்வி, சுகாதாரம், நிதி போன்ற துறைகளை கிரீன்லாந்து தானே நிர்வகிக்கிறது. ஆனால் பாதுகாப்பு மற்றும் ராணுவம் தொடர்பான விஷயங்களை டென்மார்க் அரசு கவனிக்கிறது.