வதோதரா: இந்தியா – நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் (ODI) போட்டியில், இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் இந்த வெற்றியின் பின்னணியில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து கே.எல். ராகுல் போட்டி முடிந்த பின் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
போட்டியின் போது, வாஷிங்டன் சுந்தர் முதுகு வலி காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறினார். பின்னர் இந்தியா பேட்டிங் செய்தபோது, கடைசி நேரத்தில் விக்கெட்டுகள் சரிந்ததால், சுந்தர் வலி நிவாரணி எடுத்துக் கொண்டு மீண்டும் களமிறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இதுகுறித்து கே.எல். ராகுல் கூறியதாவது:
“உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், வாஷிங்டன் சுந்தரால் ஓட முடியாது என்ற விஷயம் அவர் கிரீஸுக்கு வரும் வரை எனக்குத் தெரியாது. அவர் பந்தை டைமிங் செய்வது நன்றாக இருந்தாலும், ஓடி ரன் எடுக்க முடியாது என்பதை அறிந்ததும் நான் அதிர்ச்சியடைந்தேன். அந்த நேரத்தில் எங்கள் திட்டத்தை உடனடியாக மாற்ற வேண்டியிருந்தது,” என ராகுல் கூறினார்.
அவர் மேலும் கூறினார்:
“இரண்டு ரன்களுக்கு பதிலாக ஒரே ரன்னில் திருப்தியடைந்தோம். முக்கியமாக டாட் பால் வராமல் பார்த்துக் கொண்டோம். சுந்தர் மிகச்சிறப்பாக பந்தை அடித்தது நம்மை காப்பாற்றியது. கடைசி ஓவர் வரை ஆட்டம் சென்றிருந்தால் நிலைமை மிக ஆபத்தாக இருந்திருக்கும்.”
பிட்ச் குறித்து பேசிய ராகுல், “100 ஓவர்களும் பிட்ச் ஒரே மாதிரியாக இருந்தது. ஆனால் புதிய பந்தில் பேட்டிங் எளிதாக இருந்தது. ரோகித், கில், விராட் கோலி ஆகியோரின் பார்ட்னர்ஷிப் தான் ஆட்டத்தை நமக்குப் பக்கம் திருப்பியது,” என்றார்.
அவர் மேலும் கூறினார், “நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டிகள் எப்போதும் த்ரில்லாக இருக்கும். அவர்கள் எளிதாக ஒட்டுக்கொடுக்க மாட்டார்கள். இந்த வெற்றி நமக்கு பெரும் நிம்மதி அளித்தது,” என்று கூறினார்.
வாஷிங்டன் சுந்தரின் காயத்தையும் மீறி இந்தியா சாதித்த இந்த வெற்றி, ரசிகர்களை பெருமையடைய வைத்துள்ளது.