சென்னை: கரூர் நெரிசல் பலி சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நடைபெறும் விசாரணைக்கு நடிகர் விஜய் ஆஜராகவுள்ளார். அதிலும், திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே விஜய் ஆஜராகிறார் என்பது தற்போது பேசப்படும் விஷயமாக உள்ளது.

கடந்த செப்டம்பர் 27 அன்று கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற விஜய் பரப்புரையில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

விஜயின் பிரச்சார நேரம், நிகழ்ச்சி தாமதம் போன்ற விவரங்கள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. செப்டம்பர் 27 அன்று காலை நாமக்கல் மாவட்டத்தில் காலை 8 மணிக்கு விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அவர் சென்னையிலிருந்து அதே நேரத்தில் புறப்பட்டதால், நிகழ்ச்சி தாமதமானது.

அதனைத் தொடர்ந்து விஜய் கரூர் வேலுச்சாமிபுரத்தில் மாலை 7 மணியளவில் வந்தடைந்தார். பல மணி நேரம் காத்திருந்த மக்கள் சோர்வடைந்த நிலையில், விஜயை பார்க்க அலைமோதிய கூட்டத்தில் பெரும் நெரிசல் ஏற்பட்டது. அதில் பலர் உயிரிழந்தனர்.

இந்த வழக்கை சிபிஐ தீவிரமாக விசாரித்து வருகிறது. விஜயின் பிரச்சார அட்டவணை, நிகழ்ச்சி அனுமதி கடிதங்கள் மற்றும் சோஷியல் மீடியா பதிவுகள் அனைத்தும் தற்போது சிபிஐ ஆய்வுக்குட்பட்டுள்ளன.

இந்நிலையில், இன்று காலை 11.30 மணிக்கு சிபிஐ விசாரணை நடைபெற உள்ளது. இதற்காக விஜய் காலை 6.30 மணிக்கு பனையூர் இல்லத்திலிருந்து விமான நிலையம் நோக்கி புறப்பட்டார். காலை 7.05 மணிக்கு சென்னையிலிருந்து தனி விமானத்தில் புறப்பட்ட அவர், பனி மூட்டம் காரணமாக சிறிதளவு தாமதமானபோதிலும், காலை 9.30 மணிக்குள் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தார்.

விஜய் அங்கிருந்து நேரடியாக ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்து, திட்டமிட்ட நேரத்திற்கு முன்பாகவே டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜராக உள்ளார்.

அரசியல் வட்டாரங்கள் கூறுவதாவது, “விஜய் விசாரணைக்கு முன்பே ஆஜராகுவது, அவரின் பொறுப்பான அணுகுமுறையைக் காட்டுகிறது. இது வழக்கின் முன்னேற்றத்திலும் முக்கிய பங்காற்றலாம்” என்று தெரிவித்துள்ளனர்.