சென்னை :

வரவிருக்கும் 2026 சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி மீண்டும் அதிரடியாக பிரசாரப் புயலை எழுப்பத் தயாராகி வருகிறார். இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: “அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற உன்னத நோக்கத்துடன், தமிழகம் முழுவதும் புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணம் என்ற பெயரில் சட்டமன்றத் தொகுதி வாரியாக பிரசார சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதின் தொடர்ச்சியாக, பிப்ரவரி 21 முதல் பிப்ரவரி 26 வரை அடுத்த கட்ட பிரசாரப் பயணம் நடைபெறவுள்ளது,” என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பிப்ரவரி 21 (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு ஆவடி மற்றும் அம்பத்தூர் தொகுதிகளுக்கான பிரசாரக் கூட்டம் அம்பத்தூரில் நடைபெறும். அடுத்த நாள் பிப்ரவரி 22 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு மாதவரம் தொகுதியிலும், மாலை 5 மணிக்கு பொன்னேரி தொகுதியிலும் பிரசாரக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

மேலும், பிப்ரவரி 25 (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு மதுரவாயல் மற்றும் பூந்தமல்லி தொகுதிகளுக்கான பிரசாரக் கூட்டம் வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டப வளாகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 26 (வியாழக்கிழமை) மாலை 4.30 மணிக்கு தாம்பரம் மற்றும் பல்லாவரம் தொகுதிகளுக்கான பிரசாரக் கூட்டம் பல்லாவரம் – துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் நடைபெறவுள்ளது.

எடப்பாடி பழனிசாமியின் இந்த சுற்றுப்பயணம், அதிமுகவின் தேர்தல் தயாரிப்பில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தும் என்று கட்சித் தரப்பில் கூறப்படுகிறது. ஏற்கனவே மாநிலம் முழுவதும் நடந்த முதல் கட்ட பிரசாரப் பயணத்தில் மக்களிடமிருந்து பெரும் வரவேற்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து நடைபெறவிருக்கும் இப்பயணம், தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அதிமுக வாக்கு வங்கியை பலப்படுத்தும் முயற்சியாகக் காணப்படுகிறது.

கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொகுதி செயலாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரும் இதில் பங்கேற்று பிரசாரத்தை வெற்றிகரமாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளனர்.