மதுரை: மேலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸும், அதிமுகவும் நேரடி போட்டியில் ஈடுபட்டுள்ளனர். நாதக, தவெக, சுயேட்சைகள் இரு கட்சிகளின் வாக்குகளையும் பிரிக்க வாய்ப்புள்ளது.

மதுரை மாவட்டத்தின் 10 தொகுதிகளில் புறநகர் பகுதியான மேலூர் விவசாய நிறைந்த பகுதி. மேலூர் வட்டம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியங்கள் இடம்பெற்றுள்ளன. எளிமைக்கு இலக்கமான முன்னாள் அமைச்சர் கக்கன் இங்கு வென்றவர்.

காங்கிரஸ் 7 முறை, அதிமுக 6 முறை, திமுக 2 முறை வெற்றி பெற்றுள்ளன. அதிமுக வேட்பாளர் ஆர்.சாமி மூன்று முறை வென்றவர். இப்போது பெரியபுல்லான் என்ற செல்வம் 3வது முறை போட்டியிடுகிறார்.

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் பெ.விஸ்வநாதன் களமிறங்கியுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரும் தெலங்கானா மேலிட பொறுப்பாளருமான இவர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்.

நாதக சார்பில் கோட்டைக் குமார், தவெக சார்பில் ஏ.மதுரை வீரன், சுயேட்சையாக ஒருபோக பாசன விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் முருகன், சசிகலா அஇபுமமுக சார்பில் சோனியாகாந்தி போட்டியிடுகின்றனர்.

காங்கிரஸில் விஸ்வநாதனை நிறுத்தியதால் உள்ளூர் தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அமைச்சர் பி.மூர்த்தி ஆலோசனையில் திமுகவினர் முழு ஆதரவு அளிக்கின்றனர். அதிமுகவில் கிளைச் செயலாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

ஒருபோக விவசாயிகள் தலைவர் முருகன், அஇபுமமுக சோனியாகாந்தி ஆகியோர் அதிமுக-அமமுக வாக்குகளை பிரிப்பர். தவெக வீரன் காங்கிரஸ் வாக்குகளை ஓரளவு பெறுவார். நாதக குமார் இளைஞர்களிடம் செல்வாக்கு பெறுவார்.

காங்கிரஸ், அதிமுக இடையே நேரடி போட்டி என்றாலும் வாக்கு பிரிவு காரணமாக போட்டி கடுமையாக நடைபெறுகிறது.