சென்னை:

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுவதற்கான ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஓரிரு மாதங்களில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால், தேர்தல் ஆணையம் மாநிலத்தின் தயார்நிலையை மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்த பணிகளை நேரில் பார்வையிட தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான உயர்நிலை குழுவினர் சென்னை வர உள்ளனர். இக்குழுவில் தேர்தல் ஆணையர்கள் சுக்பிர்சிங் சாந்து, விவேக் ஜோஷி, துணை ஆணையர்கள் மானேஷ் கார்க், பானு பிரகாஷ், பவன்குமார் சர்மா, சஞ்சய் குமார், ஆசிஷ் கோயல் ஆகியோர் இணைந்துள்ளனர். இன்று காலை 9 மணியளவில் இவர்களெல்லாம் விமானம் மூலம் சென்னைக்கு வரவுள்ளனர்.

சென்னையில் இவர்களை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வரவேற்கிறார். பின்னர், ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்லும் தலைமை ஆணையர் குழுவினர் அங்குள்ள சட்டமன்றத் தேர்தல் தயார்நிலை பணிகளை ஆய்வு செய்வார்கள்.

நாளை வியாழக்கிழமை தமிழகத்தில் நடைபெறும் தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்யும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தலைமை ஆணையர் ஆலோசனை நடத்தவுள்ளார். பிற்பகலில், அனைத்து மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், மாவட்டக் காவல் சூப்பிரண்டுகள், டிஐஜி., ஐஜி. உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுடனும் அவர் ஆலோசனை நடத்துவார்.

வெள்ளிக்கிழமை காலை மத்திய அரசின் பல்வேறு விசாரணை முகமைகளின் அதிகாரிகளுடனும் தலைமை ஆணையர் கலந்துரையாடவுள்ளார். பின்னர் நண்பகலில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, தமிழகத்தின் தேர்தல் தயார் நிலை குறித்து தகவல் அளிக்கவுள்ளார்.

இந்த ஆய்வு பயணத்தின் பின், தேர்தல் ஆணையம் டெல்லி திரும்பி, தமிழகத்தையும் சேர்த்துக் கொண்டு பல மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் தேதியை அறிவிக்கும் நாளை நிர்ணயிக்க வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.