சென்னை:

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் களத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வருகின்றன. பிரதான எதிர்க்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி, பட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மறுபுறம், ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முன்கூட்டியே தொடங்கி, சில கட்சிகளுடன் ஒப்பந்தங்களையும் கையெழுத்திட்டு முடித்துள்ளது. இதனால் அரசியல் சூழலில் அதிமுக கூட்டணியின் நிலை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

அதிமுக கூட்டணியில் இதுவரை தொகுதி பங்கீடு தொடர்பான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை தொடங்கப்படாதது கூட்டணிக் கட்சி தலைவர்களில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, இம்முறை 35 தொகுதிகளை கோருகிறது. அதேபோல் பாமக 18, அமமுக 10, தமிழ் மாநில காங்கிரஸ் 6 தொகுதிகளை கேட்கிறது. மேலும் சில சிறிய கட்சிகள் தலா 1 அல்லது 2 தொகுதிகளை கோரியுள்ளன.

2021 சட்டசபை தேர்தலில் அதிமுக 179 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் இம்முறை கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால், சுமார் 81 தொகுதிகளை விட்டுக் கொடுக்க வேண்டிய சூழல் உருவாகும். அதனால் அதிமுகக்கு சுமார் 153 தொகுதிகளே மீதமிருக்கும் என்ற கணிப்பு வெளியாகியுள்ளது. இது கட்சியின் உள்நிலை அமைப்பில் சிக்கலை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கூட்டணிக் கட்சிகள் அதிருப்தி வெளியிட்டதாக கூறப்படுகிறது. தொகுதி பங்கீட்டிற்கான குழுவை இன்னும் அமைக்காதது காலதாமதம் என விமர்சிக்கப்படுகிறது.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் கூட்டணி தலைவர்களுடன் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் எந்தத் தெளிவான முடிவும் எட்டப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த அரசியல் பரபரப்பின் மத்தியில், எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாகவும், அமித் ஷா தமிழகம் வந்தபோது நேரடியாக சந்திக்காத எடப்பாடி பழனிசாமி, பின்னர் டெல்லியில் சந்தித்தது கவனிக்கப்பட்டது. அதுபோல இம்முறையும் பிரதமர் வருகைக்கு பின் டெல்லி பயணம் மேற்கொண்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த சந்திப்பின் போது தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி ஒருங்கிணைப்பு தொடர்பான விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் முன் அதிமுக கூட்டணியின் நிலைமை எந்த வகையில் மாறும் என்பது அரசியல் கவனத்தின் மையமாகியுள்ளது.