டெல்லி:

கனடா பிரதமர் மார்க் கார்னி நான்கு நாள் அரசுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். கடந்த 27ஆம் தேதி தனி விமானம் மூலம் மராட்டிய மாநில தலைநகர் மும்பை வந்த அவரை இந்திய அரசு அதிகாரிகள் வரவேற்றனர். இந்த பயணம், இந்தியா–கனடா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

மும்பையில் தங்கியிருந்த மார்க் கார்னி, அங்குள்ள முன்னணி தொழிலதிபர்கள் மற்றும் வணிகத் தலைவர்களை சந்தித்து பல்வேறு துறைகளில் முதலீட்டு வாய்ப்புகள், இருதரப்பு வர்த்தக வளர்ச்சி மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடினார். குறிப்பாக தொழில்நுட்பம், எரிசக்தி, உள்கட்டமைப்பு மற்றும் கல்வித் துறைகளில் கூட்டாண்மை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, அவர் டெல்லி பயணம் மேற்கொண்டார். தலைநகரில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருநாட்டு உறவு, வர்த்தகம் மற்றும் சர்வதேச அரசியல் சூழ்நிலை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த பயணம், சமீப காலங்களில் இந்தியா–கனடா உறவுகளில் ஏற்பட்ட சவால்களை சமாளித்து, புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. இருநாடுகளும் வர்த்தக மற்றும் முதலீட்டு துறைகளில் உறவை மேலும் விரிவுபடுத்த உறுதி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மார்க் கார்னியின் இந்த இந்திய பயணம், எதிர்காலத்தில் இருநாட்டு உறவுகளை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் முக்கிய கட்டமாக அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் மதிப்பிடப்படுகிறது.