சென்னை:
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முக்கியமான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தற்போது மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு உள்நாட்டு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் துபாய், இலங்கை, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் விமான சேவைகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் தென் தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
சமீப காலமாக மதுரை விமான நிலையத்தில் பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் தமிழர்கள் மற்றும் தொழில்வாணிக தொடர்புடைய பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு மதுரை விமான நிலையத்தை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக எழுந்து வந்தது.
இந்நிலையில், மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக விமான நிலையத்தின் ஓடுபாதை (ரன்-வே) நீட்டிக்கப்பட உள்ளது. மேலும் அதிக அளவில் பயணிகளை கையாளக்கூடிய புதிய முனைய கட்டிடம் (டெர்மினல்) அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் பெரிய அளவிலான சர்வதேச விமானங்களும் மதுரையில் இருந்து நேரடியாக இயக்கப்படும் வாய்ப்பு உருவாகும் என கூறப்படுகிறது.
மதுரை விமான நிலையத்தின் மேம்பாட்டால் தென் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் ஊக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இந்த விமான நிலையத்தின் மூலம் பயனடைவார்கள். மேலும் சுற்றுலா, தொழில் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கும் இந்த திட்டம் உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மொத்தம் ஆறு முக்கியமான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஜல் ஜீவன் திட்டம் 2.0, மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்துதல், மேற்கு வங்காளத்தில் சந்திராகாச்சி – கராக்பூர் இடையே 4-வது ரெயில்வே பாதை அமைத்தல், சைந்தியா – பாகுர் இடையே 3-வது ரெயில்வே பாதை திட்டம், மத்திய பிரதேசத்தில் பத்னாவார் – தண்ட்லா – திமார்வானி 4 வழிச்சாலை அமைத்தல் உள்ளிட்ட திட்டங்கள் அடங்கும்.
இந்த திட்டங்கள் அனைத்திற்கும் மொத்தமாக சுமார் 8.80 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடு செய்யப்படும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்த திட்டங்கள் நாட்டின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதோடு, பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றும் என அவர் கூறினார்.
மதுரை விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் இந்த முடிவு தென் தமிழக மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் மதுரையில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு நேரடி விமான சேவைகள் தொடங்கும் வாய்ப்பும் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.