மதுரையின் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழாவின் உச்சநிகழ்வாக கருதப்படும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று அதிகாலை கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கில் அல்ல, லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்ட நிலையில், தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலில் இருந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளிய கள்ளழகர், பச்சை பட்டுடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார்.

அழகர் வைகையில் எழுந்தருளிய தருணத்தில் பக்தர்கள் “கோவிந்தா… கோவிந்தா…” என முழக்கமிட்டு ஆனந்த குரலில் வரவேற்றனர். தண்ணீரை பீய்ச்சி அடித்து பக்தர்கள் உற்சாகமாக வழிபட்டனர். இந்த தரிசனத்தை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளியூர் மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் மதுரைக்கு திரண்டிருந்தனர்.

காலை 7.25 மணி வரை கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் பகல் 12 மணிக்கு ராமராயர் மண்டபம் நோக்கி புறப்படுகிறார். அங்கு அங்கப்பிரதட்சணம், தீர்த்தவாரி போன்ற ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இன்று இரவு 9 மணிக்கு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் எழுந்தருளுகிறார்.

நாளை அதிகாலை ஏகாந்த சேவை, மதியம் தேனூர் மண்டபத்தில் மண்டுக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. மேலும் சித்திரை திருவிழாவின் சிறப்பு நிகழ்வான தசாவதார காட்சி நாளை நள்ளிரவு தொடங்கி விடிய விடிய நடைபெறும்.

கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு மதுரை மாநகர் முழுவதும் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 5,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். டிரோன் கண்காணிப்பு, சிறப்பு பேருந்துகள், குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தொழிலாளர் தின விடுமுறை காரணமாக இந்த ஆண்டு கூட்டம் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.