நிதி ஆயோக் கூட்டத்தில் மதுரை புறக்கணிப்பு: தென் மாவட்ட மக்கள் மற்றும் தொழில்முனைவோர் கடும் ஏமாற்றம்

தில்லியில் அண்மையில் நடைபெற்ற பதினொன்றாவது நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கலந்துகொண்டு மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சிக்கான கோரிக்கைகளை முன்வைத்தார். கல்வி, அதிவேக ரயில் போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு எனப் பல முக்கிய அம்சங்களை அவர் வலியுறுத்தியிருந்தாலும், தென் தமிழகத்தின் தலைநகரான மதுரையின் மிக முக்கியமான வளர்ச்சித் திட்டங்கள் இந்தக் கோரிக்கைப் பட்டியலில் விடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

முக்கியத் திட்டங்கள் புறக்கணிப்பு

முதலமைச்சர் விஜய், கோயம்புத்தூருக்கு ஒரு புதிய அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) வேண்டும் என்றும், சென்னை முதல் கன்னியாகுமரி வரை அதிவேக ரயில் வழித்தடம் அமைக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். ஆனால், மதுரை தோப்பூரில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு, தற்போது ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள், மதுரை விமான நிலைய விரிவாக்கம், மதுரை – தூத்துக்குடி தொழில் வணிகச் சாலை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் போன்ற வாழ்வாதாரத் திட்டங்களுக்கு நிதி ஆயோக் மேடையில் போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.

நிபுணர்களின் கவலை

இது குறித்து மதுரை உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுச் சங்கத்தின் ஆலோசகர் டாக்டர் மகேந்திரன் கூறுகையில், “ஒட்டுமொத்த தென் தமிழகத்தின் வளர்ச்சிக்கான நுழைவாயிலாக விளங்கும் மதுரையின் நீண்டகாலத் திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டது வேதனையளிக்கிறது. தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் ஐம்பது சதவீதத்தை எட்டியுள்ள நிலையில், வரும் மாதங்களில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகங்களைத் திறக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த நிலையில், மத்திய பட்ஜெட் ஒதுக்கீட்டை அதிகரிக்கவும், பணிகளை விரைந்து முடிக்கவும் முதல்வர் அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். அதை விடுத்து, புதிய எய்ம்ஸ் கோரிக்கைக்குத் தரும் முக்கியத்துவத்தை, நடப்புத் திட்டத்தின் மீது காட்டாதது வருத்தமளிக்கிறது” என்று குறிப்பிட்டார்.

விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் திட்டம்

மதுரை விமான நிலையத்திற்கு அண்மையில் சர்வதேச அந்தஸ்து வழங்கப்பட்டாலும், பெரிய ரக விமானங்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக ஓடுதளத்தை இரண்டாயிரத்து இருநூற்று எண்பத்தைந்து மீட்டரிலிருந்து மூவாயிரத்து எண்ணூற்று பத்து மீட்டராக விரிவாக்கம் செய்யும் பணி நிலுவையில் உள்ளது. நில எடுப்பு மற்றும் மறுவாழ்வுத் திட்டங்களுக்கு மத்திய – மாநில அரசுகளின் கூட்டு நிதி மற்றும் விரைவான அனுமதி அவசியம். அதேபோல், மதுரை போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவும் மெட்ரோ ரயில் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களுக்குக் குரல் கொடுக்கப்படாதது ஏன் என்பது புரியவில்லை என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும், வைகை நதியின் சுற்றுச்சூழல் சீரமைப்பு மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கான சிறப்பு நிதியுதவியும் கோரப்படவில்லை.

தென் மாவட்டங்களின் பொருளாதார வீழ்ச்சி

மாமதுரையர் அமைப்பின் தலைவர் க. திருமுருகன் கூறும்போது, “மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியே தமிழகத்தின் சமச்சீர் வளர்ச்சிக்கான அடிப்படை. மதுரை – தூத்துக்குடி தொழில் வழித்தடத்தில் வாகன உதிரிபாகத் தொழிற்சாலைகள் மற்றும் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைப்பதன் மூலம் மட்டுமே இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடியும். மதுரை முடங்கினால், அது ஒட்டுமொத்த தென் தமிழகத்தின் வளர்ச்சியையும் முடக்குவதற்குச் சமம். எனவே, இனியாவது மாநில அரசு தென் மாவட்டங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து உடனடியாகச் செயல்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார். மதுரைக்கான திட்டங்களில் காட்டப்படும் இந்த மெத்தனப் போக்கு, தென் மாவட்ட மக்களின் நம்பிக்கையைப் பாதித்துள்ளது.