
மதுரை மாநகரின் அடையாளமாக திகழும் வரலாற்றுச் சிறப்புமிக்க சித்திரை திருவிழா இந்த ஆண்டும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சைவமும் வைணவமும் இணையும் ஆன்மிக ஒற்றுமையின் பெருவிழாவாக கருதப்படும் இந்த திருவிழாவைக் காண பல லட்சம் பக்தர்கள் மதுரையில் குவிந்ததால் நகரம் முழுவதும் திருவிழா உற்சாகம் பொங்கியது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அருகிலுள்ள அழகர்கோவில் ஆகிய இரு தலங்களையும் இணைத்து நடத்தப்படும் இந்த திருவிழா, தமிழகத்தின் மிகப்பெரிய ஆன்மிக விழாக்களில் ஒன்றாகும். கடந்த மாதம் 19-ஆம் தேதி மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. அதேபோல் அழகர்கோவில் சார்பில் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் முகூர்த்தக்கால் நடுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா ஆரம்பமானது.
கடந்த 28-ஆம் தேதி மீனாட்சி அம்மன் – சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தேரோட்டமும் சிறப்பாக நடந்தது. இன்று நடைபெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி திருவிழாவின் உச்சக்கட்டமாக அமைந்தது.
பச்சை பட்டுடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகரை காண பக்தர்கள் அலைமோதினர். “கோவிந்தா” முழக்கங்கள் முழங்கிய நிலையில் பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து வரவேற்றனர்.
மக்கள் திரள் அதிகமாக இருந்ததால் மதுரை மாநகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போக்குவரத்து மாற்றங்கள், குடிநீர் வசதி, மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.