
திருநெல்வேலி மாவட்டத்தில் வெப்ப அலை தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் சுகுமார் ஆலோசனை வழங்கியுள்ளார். அதிக வெப்பநிலை காரணமாக நெல், பயறு வகைகள், பருத்தி உள்ளிட்ட பல பயிர்கள் பாதிக்கப்படக்கூடும் என்பதால் தொழில்நுட்ப வழிமுறைகள் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீர் இருப்பு குறைந்து வரும் சூழலில், அதிக நீர் தேவைப்படும் பயிர்களை தவிர்த்து சோளம், கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்கள் அல்லது உளுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை போன்ற குறைந்த நீர் தேவையுள்ள மாற்றுப் பயிர்களை சாகுபடி செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. இது மண்வளத்தையும் மேம்படுத்தும்.
வெப்பம் குறைவாக இருக்கும் அதிகாலை அல்லது மாலை நேரங்களில் மட்டுமே நீர் பாய்ச்ச வேண்டும். நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வயல்வெளி பணிகளை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சொட்டு நீர்ப்பாசனம், தெளிப்பு நீர்ப்பாசனம் போன்ற முறைகள் மூலம் நீர் விரயத்தை குறைக்கலாம்.
மண்ணில் ஈரப்பதம் நீடிக்க காய்ந்த இலைகள், தென்னை நார் கழிவு, மரத்தூள் அல்லது பாலித்தீன் தாள்களைப் பயன்படுத்தி மூடாக்கு இடலாம். இது மண்ணை குளிர்ச்சியாக வைத்திருந்து நீர் ஆவியாவதைத் தடுக்கும்.
மேலும் நாற்றங்கால் மற்றும் காய்கறித் தோட்டங்களில் நிழல்வலை அமைப்பது பயிர்களுக்கு வெப்ப அழுத்தம் குறைக்க உதவும். வறட்சியை தாங்க பி.பி.எப்.எம். போன்ற நுண்ணுயிர் உரங்கள், கடல்பாசிச் சத்து மற்றும் பொட்டாசியம் கலவைகளை பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவமழைக்கு முன்பாக கோடை உழவு செய்வது மண்ணின் நீர்ப்பிடிப்பு திறனை உயர்த்தும் என்றும், பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் என்றும் கலெக்டர் குறிப்பிட்டுள்ளார்.