ராமநாதபுரம்,
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பரமக்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, “இந்த தேர்தலில் திமுக 100 சதவீதம் ஆட்சிக்கு வராது” என்று தெரிவித்தார். திமுக ஆட்சியில் மக்கள் மீது அதிகமான வரிகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் பொருளாதார சுமையை எதிர்கொண்டு வருவதாகவும் கூறினார்.
வீட்டு வரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், கடைகளுக்கான வரி 105 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். “குப்பைக்குக் கூட வரி வசூலிக்கும் நிலைக்கு திமுக அரசு சென்றுள்ளது” என அவர் விமர்சித்தார்.
மேலும், திமுக அரசு அதிக அளவில் கடன் வாங்கி மாநிலத்தை கடன் சுமையில் ஆழ்த்தியுள்ளதாகவும், அந்த கடன் எங்கு செல்கிறது என்பது மக்களுக்கு தெரியும் என்றும் அவர் கூறினார். திமுக அரசு அறிவித்துள்ள கூப்பன் திட்டத்தையும் அவர் கடுமையாக சாடினார்.
“கூப்பன் திட்டம் மக்களுக்காக அல்ல, கொள்ளைக்காக அறிவிக்கப்பட்டது. திமுக நிர்வாகிகள் பணம் கொடுத்தால்தான் கூப்பன் தருவார்கள். குறிப்பிட்ட பொருட்களையே வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்துவார்கள்” என அவர் குற்றம்சாட்டினார்.
அதிமுக ஆட்சியில் எந்த வித பாரபட்சமும் இன்றி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்றும், இலவசமாக ஃபிரிட்ஜ் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
மேலும், தாய்மார்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்றும், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்றும் கூறினார். ஆண்டுக்கு மூன்று சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இளைஞர்களுக்கான திட்டங்களையும் அறிவித்த அவர், “படித்து வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்” என்றார்.
விவசாயிகள் மற்றும் நெசவாளர்களுக்கான பல திட்டங்களையும் அறிவித்தார். கைத்தறி நெசவாளர்களுக்கு மின்சாரம் 400 அலகுகள் வரை வழங்கப்படும் என்றும், காவிரி–குண்டாறு திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.
மேலும், திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்களும் மீண்டும் தொடங்கப்படும் என்றும், குடிநீர் மற்றும் பாசன வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
இறுதியாக, “மீண்டும் அம்மாவின் ஆட்சியை கொண்டு வர இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்” என பொதுமக்களிடம் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.