சென்னை,
நாட்டில் எரிவாயு விநியோகம் தொடர்பாக எழுந்துள்ள அச்சங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்தியன் ஆயில் நிறுவனம் விரிவான விளக்கத்தை வெளியிட்டுள்ளது. போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தை சிக்கல்கள் இருந்தாலும், இந்தியாவில் எரிவாயு விநியோகம் எந்த தடையும் இன்றி சீராக நடைபெற்று வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாள்தோறும் சுமார் 28 லட்சம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுகின்றன என்றும், அதில் வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எரிவாயு முன்பதிவில் டிஜிட்டல் முறைகள் அதிகரித்து வருவதாகவும், தற்போது 87 சதவீத முன்பதிவுகள் எண்ம முறையில் நடைபெறுகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது. மக்கள் நேரில் சென்று முன்பதிவு செய்வதை விட, கைப்பேசி அழைப்பு முறை மற்றும் குறுஞ்செய்தி மூலம் முன்பதிவு செய்ய ஊக்குவிக்கப்பட்டு வருகிறார்கள்.
சிலிண்டர்கள் சரியான பயனாளிகளிடம் சென்றடைவதை உறுதி செய்ய, ஒருமுறை கடவுச்சொல் முறையும் பயன்படுத்தப்படுகின்றது. விநியோகம் போதுமான அளவில் இருப்பதுடன், நிலைமையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதற்கிடையில், சில விநியோகஸ்தர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் புகார்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சிலிண்டர்களை பதுக்கி வைத்து அதிக விலையில் விற்பனை செய்யும் செயல்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. போர்பதற்றம் ஏற்பட்ட பின்னர் நாடு முழுவதும் நடத்தப்பட்ட 68,000க்கும் மேற்பட்ட திடீர் சோதனைகளில், 48,000க்கும் அதிகமான சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதனுடன் தொடர்புடையதாக 855 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 141 விநியோகஸ்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 5 விநியோக நிறுவனங்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தவறான தகவல்களை நம்பி தேவையற்ற அச்சத்தில் அதிகமாக சிலிண்டர்கள் முன்பதிவு செய்ய வேண்டாம் என்றும் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
மொத்தத்தில், எரிவாயு விநியோகம் சீராக நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அமைதியாக இருக்கலாம் என்றும், எந்தவொரு தட்டுப்பாடும் இல்லை என்றும் இந்தியன் ஆயில் உறுதியளித்துள்ளது.