சென்னை:
“கருணாநிதியை வீட்டு சிறையில் வைத்திருந்ததாக வெளியான தகவலை அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு விசாரித்து தண்டனை பெற்றுத் தருவோம்” என திருவண்ணாமலையில் இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னதாக தருமபுரியில் பேசுகையில், “கருணாநிதியின் இறுதி காலத்தில், ஸ்டாலின் அவரை கைதியாக தான் வைத்திருந்தார். சொந்த அப்பாவையே அப்படி வைத்தவர், நாட்டு மக்களை எப்படி வைப்பார்” எனப் பேசியிருந்தார். எடப்பாடி பழனிசாமியின் இந்தப் பேச்சு தமிழக அரசியலில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

முதல்வர் ஸ்டாலின் நேற்று நெல்லையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசும்போது, “முதலமைச்சராக என்னுடைய செயல்பாடுகளை விமர்சிக்க எதிர்க்கட்சித் தலைவரான உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. ஆனால், தலைவர் கலைஞருடன் ஒரு மகனாக என்னுடைய உறவைப் பற்றி, ஒரு சொல் பேசக் கூட உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. எந்தத் தகுதியும் கிடையாது. கலைஞரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? தலைவர் கலைஞர் ஒரு சிங்கம், அவருடைய பிள்ளை நான்” என காட்டமாக பதிலடி கொடுத்திருந்தார்.
மேலும், எடப்பாடியின் பேச்சுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகொ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பரப்புரை கண்ணியக்குறைவாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், இன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்திருந்தவர்களை அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு விசாரித்து கண்டறிந்து, அப்படி வீட்டுச் சிறையில் வைத்திருந்தவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்” எனக் கூறியுள்ளார்.