வாக்கு செலுத்த ஊருக்கு செல்ல முடியாமல் தவிக்கும் பயணிகள்... 100% வாக்குப்பதிவு சாத்தியமா?
சென்னை:
தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க முயன்ற பல பயணிகள் போக்குவரத்து சிக்கலால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தமிழகத்தில் மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், 75,064 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
பேருந்து வசதி குறைவு – பயணிகள் அவதி
தேர்தலை முன்னிட்டு வழக்கமான பேருந்துகளுடன் ஆயிரக்கணக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், கிளாம்பாக்கம், மாதவரம், கோயம்பேடு உள்ளிட்ட முக்கிய பேருந்து நிலையங்களில் போதிய வசதி இல்லை என பயணிகள் குற்றம்சாட்டினர்.
பலர் நள்ளிரவு வரை பேருந்து நிலையங்களில் காத்திருந்தும், பேருந்துகள் கிடைக்காமல் தவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் அதிகமாக சிரமமடைந்தனர்.
போக்குவரத்து நெரிசல்
பேருந்து கிடைத்தவர்களும் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கினர். சிலர் தாம்பரம் தாண்ட பல மணி நேரம் எடுத்ததாகவும், நேற்று இரவு கிளம்பியவர்கள் இன்று காலை வரை திண்டிவனம், விழுப்புரம் பகுதிகளை மட்டுமே அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில் போன்ற தூர மாவட்டங்களை சேர்ந்தவர்கள், “வாக்குப்பதிவு முடிவதற்குள் ஊருக்கு சென்று சேர முடியுமா?” என சமூக வலைதளங்களில் கவலை தெரிவித்து வருகின்றனர்.
100% வாக்குப்பதிவு சாத்தியமா?
வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரங்கள் மூலம் அதிக வாக்குப்பதிவை இலக்காகக் கொண்டு செயல்பட்ட தேர்தல் ஆணையத்திற்கு, இந்த போக்குவரத்து சிக்கல் பெரிய சவாலாக பார்க்கப்படுகிறது.