தவெக தலைவர் விஜய் இன்று காலை திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். கடற்கரையோரம் அமைந்துள்ள அந்த புனிதத் தலத்தில் அவர் வழிபாடு செய்ததையடுத்து, பக்தர்களும் கட்சி தொண்டர்களும் திரண்டிருந்தனர். விஜய்க்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

தமிழகத்தில் கடந்த 23-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு சுமார் 85 சதவீதம் அளவுக்கு நடைபெற்றதாக கூறப்படுகிறது. தவெக சார்பில் 233 தொகுதிகளில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் மட்டும் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு வழங்கப்பட்டது. தேர்தலுக்கு முன்னதாக மாநிலம் முழுவதும் விஜய் பல இடங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொண்டார்.

வரும் மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், விஜய் திருச்செந்தூர் சென்று முருகனை தரிசனம் செய்தது அரசியல் வட்டாரத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் அவர் மதுரை சென்றார். அங்கிருந்து கார் மூலம் திருச்செந்தூருக்குச் சென்ற விஜய், முதலில் கடற்கரையைச் சென்று கால்களை நனைத்து, பின்னர் கோயிலுக்குள் நுழைந்தார். மூலவரான சுப்பிரமணியசுவாமியை மனமார வழிபட்டார்.

விஜய்யுடன் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் உடன் இருந்தனர். கோயில் வளாகத்தில் அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. வழிபாட்டின்போது, வெற்றிவேல் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. தரிசனத்துக்குப் பிறகு விஜய் அங்கிருந்து புறப்பட்டார்.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாகத் திகழ்கிறது. கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள இந்தத் திருத்தலம், தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களிலிருந்தும் பக்தர்களை ஈர்க்கும் முக்கிய ஆன்மிக மையமாக உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து முருகனை தரிசித்து செல்வது வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில், தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கும் சூழலில் விஜய் மேற்கொண்ட இந்த திருச்செந்தூர் தரிசனம், அரசியல் மற்றும் ஆன்மிகம் இணைந்த ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அவரது வருகை காரணமாக கோயில் வளாகத்திலும் கடற்கரைப் பகுதியிலும் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பக்தர்கள் பலரும் அவரைக் காண ஆர்வம் காட்டினர். பாதுகாப்பு ஏற்பாடுகளும் வலுப்படுத்தப்பட்டிருந்தன.

விஜய்யின் இந்த வழிபாடு, தேர்தல் முடிவுக்கு முன் கட்சியினரிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. முருகனின் அருள் வேண்டி அவர் மேற்கொண்ட இந்த தரிசனம், கட்சி ஆதரவாளர்களிடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது.