தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வாக்கு எண்ணும் செயல்முறை குறித்த சிறப்பு பயிற்சி சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி, தேர்தல் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு முக்கிய வழிகாட்டுதலாக அமைந்தது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி 234 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்த நிலையில், பதிவான வாக்குகள் வரும் மே 4-ஆம் தேதி எண்ணப்பட உள்ளன. தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தற்போது 62 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

இந்த சூழலில், வாக்கு எண்ணிக்கை நாளில் எந்த தவறும் இல்லாமல், முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் பணிகள் நடைபெற வேண்டும் என்பதற்காக அதிகாரிகளுக்கு விரிவான பயிற்சி வழங்கப்பட்டது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாவட்ட கணினி நிரலாளர்கள், உதவி கணினி நிரலாளர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

வாக்கு எண்ணும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், சுற்று வாரியான எண்ணிக்கை நடைமுறை, தபால் வாக்கு எண்ணிக்கை, இ.வி.எம். திறப்பு நடைமுறை, விவிபாட் சரிபார்ப்பு, முடிவுகளை கணினியில் பதிவு செய்வது போன்ற பல அம்சங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

பயிற்சியில் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி அ. சிவஞானம், இணை தலைமை தேர்தல் அதிகாரி ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி வே. ஸ்ரீதர், இணை தலைமை தேர்தல் அதிகாரி ஆர். மேனுவல்ராஜ், புதுச்சேரி முதன்மைப் பயிற்சியாளர் ஞானவேல் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

மே 4-ஆம் தேதி தமிழகத்தின் அடுத்த அரசை தீர்மானிக்கும் முக்கிய நாள் என்பதால், தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரமாக செய்து வருகிறது. இதனால் அரசியல் கட்சிகளும், மக்களும் வாக்கு எண்ணிக்கையை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.