சென்னை: விஜய் ஆட்சி அமைக்கத் தீவிரமாக முயற்சிக்கும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று காலை நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி, லீமாரோஸ் உட்பட 5 எம்எல்ஏக்கள் இல்லாததால் சலசலப்பு எழுந்துள்ளது.

கடந்த நான்காம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பெரிய கட்சியாக வென்றது. இது திராவிடக் கட்சிகளுக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது. பெரும்பான்மை இல்லாததால் விஜய் ஆட்சி அமைக்கவில்லை. காங்கிரஸ் (5), சிபிஐ (2), சிபிஎம் (2) ஆகியவை ஆதரவு அளித்துள்ளன. மொத்தம் 118 எம்எல்ஏக்கள் தேவைப்படும் நிலையில் விஜய்க்கு 116 ஆதரவுகள் கிடைத்துள்ளன.
நேற்றிரவு ஆளுநரைச் சந்தித்த விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால் ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை. அப்போது அமமுக எம்எல்ஏ காமராஜ் ஆதரவு கடிதம் கொடுத்ததாகக் கூறப்பட்டது. ஆனால் காமராஜ் அதை மறுத்து, விசாரணை கோரினார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆளுநரிடம் குற்றவாளிகளுக்கு நடவடிக்கை கோரினார். இது விஜய்க்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. திருமாவளவன் இன்னும் நிலைப்பாடு அறிவிக்கவில்லை.
அதிமுகவில் சலசலப்பு: அதிமுக எம்எல்ஏக்கள் விஜய்க்கு ஆதரவாகத் தாவலாம் எனத் தகவல்கள் வந்தன. லீமாரோஸ், தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் என்பதால் அவர் சில எம்எல்ஏக்களைத் திருப்பலாம் எனப் பேச்சு. ஆனால் நேற்று வரை அது நடக்கவில்லை. இன்று எடப்பாடி தலைமையில் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் லீமாரோஸ் இல்லை.
எஸ்.பி.வேலுமணி, பெருந்துறை ஜெயகுமார், வேலுகோவிந்தராஜன் உட்பட 5 எம்எல்ஏக்கள் ஆப்சென்ட். இவர்கள் புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டு இன்று சென்னைக்கு அழைத்துவரப்பட்டனர். இருந்தும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இது எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கூட்டம் முடிந்த பின் எடப்பாடி புதிய அரசுக்கு வாழ்த்து தெரிவித்தார். தவெக அல்லது விஜய் பெயர் குறிப்பிடப்படவில்லை. எனவே இந்த 5 எம்எல்ஏக்களும் விஜய் பக்கம் தாவியிருக்கலாமா என சந்தேகம் எழுந்துள்ளது. விஜய் ஆட்சி அமைப்பில் இது பெரிய திருப்பமாகலாம்.