சென்னை: தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டசபைத் தேர்தல் முடிவுகள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்த நிலையில், திமுக கூட்டணியில் இருந்த சில கட்சிகள் தவெக அரசுடன் நெருக்கம் காட்டி வருகின்றன. அந்த வகையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மகன் துரை வைகோ ஆகியோரின் நடவடிக்கைகள் அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதங்களை எழுப்பியுள்ளன.
முன்னாள் திமுக நிர்வாகி கே.எஸ். ராதாகிருஷ்ணன், துரை வைகோவின் கருத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். “திமுக சின்னத்தில் போட்டியிட்டது துரதிருஷ்டமாம். மானம், வெட்கம், ரோசம் இருந்திருந்தால் அப்போதே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் என்று கூறிவிட்டு, கூட்டணியை விட்டு வெளியே வந்திருக்கலாமே” என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும், “இந்நேரம் திமுக வெற்றி பெற்றிருந்தால் இவர் இப்படி பேட்டி கொடுத்திருப்பாரா?” என்றும் கேட்டார்.
விஜய் முதல்வராக பொறுப்பேற்ற உடன், வைகோ மற்றும் அவரது மகன் துரை வைகோ ஆகியோர் விஜய்யை சந்தித்தது பலரின் கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக முதல்வர் விஜய் வைகோவின் இல்லத்திற்கு வந்து சந்தித்த போது வைகோ மிகுந்த உற்சாகத்தில் காணப்பட்டார். அதோடு வீட்டில் உள்ள பணிப்பெண்களையும் விஜய்யிடம் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை மதிமுக எம்.எல்.ஏக்கள் புறக்கணித்தது அரசியலில் கவனத்தை ஈர்த்தது.
நேற்று திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக சென்ற முதல்வர் விஜய்யை, திருச்சி தொகுதி எம்.பியும் வைகோவின் மகனுமான துரை வைகோ விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டவசமானது. தனி சின்னத்தில் போட்டியிட்டிருந்தால் தவெகவுக்கு ஆதரவு அளித்திருக்கலாம்” என்ற கருத்தை தெரிவித்தார்.
இதற்கு முன்னாள் திமுக நிர்வாகி கே.எஸ். ராதாகிருஷ்ணன் கடுமையான பதிலளித்துள்ளார். “உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டம் என கூறுபவர்கள், அப்போதே கூட்டணியில் இருந்து வெளியேறியிருக்கலாம். இன்று இப்படி பேசுவது அரசியல் நாகரிகத்திற்கு பொருத்தமல்ல” என்று அவர் கூறினார். மேலும், “தி.மு.க.வைப் பற்றியும், கலைஞரைப் பற்றியும், ஸ்டாலின் அவர்களைப் பற்றியும், உங்கள் தந்தை வைகோ பேசாத பேச்சா? அத்தனை ஏச்சு பேச்சுக்களையும் மறப்போம், மன்னிப்போம் என்று புறந்தள்ளி விட்டு முற்றாக அழிந்து போன உங்கள் கட்சிக்கு உயிர் கொடுத்தவர் திமுக என்பதை மறந்து விடாதீர்கள்” என்று வலியுறுத்தினார்.
“பணத்திற்கும் பதவிக்கும் நேரத்திற்கு தக்க வேஷம் போடுபவர்களை காலம் புறந்தள்ளும். நாளை தமிழக அரசியல் வரலாறு எழுதப்படும் போது வருகிற இளம் தலைமுறை உங்களை எள்ளி நகையாடும்” என்றும் கே.எஸ். ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்தார். வைகோ மற்றும் அவரது மகன் துரை வைகோ ஆகியோர் தற்போது விஜய்க்கு ஆதரவாக செயல்படுவது அவர்களின் அரசியல் சந்தர்ப்பவாதத்தை காட்டுகிறது என்று அவர் விமர்சித்தார்.
இப்படி அடுத்தடுத்து தவெகவுக்கு ஆதரவாக மதிமுக பேசி வருவதால், திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுடன் கூட்டணி அமைக்க போவதாக பேச்சுக்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்தன. ஆனால் இதனை வைகோ மறுத்துள்ளார். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க மாட்டோம் எனவும், வரும் 27 ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்வோம் என்றும் விளக்கம் அளித்தார்.