டெல்லி: தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்தபோது மகாகவி பாரதியாரின் புத்தகத்தை பரிசாக வழங்கியுள்ளார். இந்த சந்திப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலை கடந்த சில வாரங்களாக பாஜகவிலிருந்து விலகுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வதந்திகள் பரவி வந்த நிலையில், இச்சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அண்ணாமலை வேகமான செயல்பாடுகளால் பாஜகவின் தமிழகத் தலைவராக உயர்ந்தார். அதிரடி பேச்சுகளால் இளைஞர்களைக் கவர்ந்ததோடு, நடைப்பயணம் மூலம் கட்சியையும் வளர்த்தார். இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பு மாநில பாஜகத் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை மாற்றப்பட்டார். இதையடுத்து தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. இதில் 27 இடங்களில் போட்டியிட்ட பாஜக ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது, மற்ற தொகுதிகளில் படுதோல்வியைச் சந்தித்தது.

தோல்விக்கான காரணங்கள் ஆராயப்பட்ட நிலையில், தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டது ஒரு காரணம் என்று அவரது ஆதரவாளர்கள் வலைத்தளங்களில் பதிவிட்டுப் பரபரப்பை உருவாக்கினர். அண்ணாமலை மாநிலத் தலைவராக இருந்தபோது நாடாளுமன்றத் தேர்தலில் பதினோர் சதவீத வாக்குகளைப் பெற்ற நிலையில், தற்போது அது இரண்டு சதவீதமாகக் குறைந்துள்ளது என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.

மாநிலத் தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்ட பின்னர் அண்ணாமலைக்குக் கட்சியில் முக்கியப் பொறுப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை. அவர் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்பட்டது. அதற்கேற்பத் தேர்தல் பிரச்சாரத்திலும் அண்ணாமலை பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில் சிபிஎஸ்ஈ பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பிலிருந்து மும்மொழிக் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டிலிருந்தே அமல்படுத்தும் மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக அண்ணாமலை சமீபத்தில் பரபரப்பு அறிக்கையை வெளியிட்டார். இது பாஜகத் தலைமையை அதிர வைத்தது. மத்திய அரசின் எந்தத் திட்டத்துக்கும் முதலில் ஆதரவுக் குரல் கொடுத்து வந்த அண்ணாமலை, முதன்முறையாக எதிர்ப்புக்குரலை ஓங்கி ஒலித்தார்.

இது பாஜகவுக்குள் பலத்த சலசலப்பை உண்டாக்கியது. இதைத்தொடர்ந்து அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கப்போகிறார் என்ற பரபரப்பு அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டது. தன்னை மையப்படுத்தி வரும் தகவல்களுக்கு அண்ணாமலை பதில் எதுவும் கூறாமல் மவுனம் காத்து வருகிறார். அதே நேரம் அண்ணாமலையைச் சமாதானப்படுத்தும் முயற்சிகளும் ஒரு பக்கம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. அதில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற தகவலும் பரவி வருகிறது.

அண்ணாமலை பாஜகவில் நீடிப்பாரா, தனிக்கட்சி தொடங்குவாரா என்ற யூகங்களும் தகவல்களும் பரவி வரும் நிலையில், அண்ணாமலை நேற்று மாலை திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். இதற்காக சென்னை விமான நிலையம் வந்த அண்ணாமலையிடம் நிருபர்கள் தனிக்கட்சி தொடர்பாகச் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர். அதற்கு அண்ணாமலை ‘ஓரிரு நாட்கள் பொறுத்துக்கொள்ளுங்கள். எல்லாவற்றையும் சொல்கிறேன்’ என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினைச் சந்தித்துப் பேசினார். அப்போது பாஜகவில் இருந்து விலகுவதற்கான ராஜினாமாக் கடிதத்தைக் கட்சித் தலைவர் நிதின் நபினிடம் ஒப்படைத்தார். அதனைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் அண்ணாமலை சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது பாரதியார் புத்தகத்தை அமித்ஷாவுக்குப் பரிசாக வழங்கினார். அமித்ஷாவுடனான சந்திப்பின் போது தமிழக அரசியல் நிலைமை குறித்து விவரித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் பாஜகவின் வாக்கு வங்கி சரிந்ததற்கான காரணத்தை அமித்ஷாவிடம் அண்ணாமலை கூறியதாகக் கூறப்படுகிறது. தமிழக பாஜகவில் நிகழும் முரண்பாடுகள் குறித்தும் தலைவர்களிடையே உள்ள அதிருப்தி குறித்தும் அமித்ஷாவிடம் விளக்கியதாகத் தெரிகிறது.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு தமிழ்நாடு பாஜகத் தலைவர் நயினார் நாகேந்திரன் உடனடியாக டெல்லி வருமாறு கட்சித் தலைமை அழைப்பு விடுத்துள்ளது. இன்றிரவு பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரைச் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.