சென்னை: தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகுவதாக தேசியத் தலைவர் நிதின் காபினைச் சந்தித்து இன்று கூறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்ணாமலை புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்கித் தமிழகத்தில் களமாடும் திட்டத்தில் இந்த முடிவை எடுத்துள்ள நிலையில், எந்த மாதிரியான நிலைப்பாட்டை எடுக்கப் போகிறார் என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டின் முன்னாள் பாஜகத் தலைவர் அண்ணாமலை, கடந்த 2020-ல் பாஜகவில் இணைந்தார். கட்சியில் சேர்ந்த வேகத்தில் மாநிலத் தலைவர் பொறுப்புக்கு உயர்ந்தார். கடந்த ஆண்டு அதிமுகக் கூட்டணிக்காக அவரிடம் தலைவர் பதவி பறிக்கப்பட்டு நயினார் நாகேந்திரனிடம் வழங்கப்பட்டது. இதனால் கடும் அதிருப்தியில் இருந்த அண்ணாமலை தற்போது பாஜகவில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதன்படி இன்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் நிதின் காபின், பாஜக பொதுச்செயலாளர் (அமைப்பு) பி.எல். சந்தோஷ் ஆகியோரை அண்ணாமலை சந்தித்துப் பேசினார். இந்த வேளையில் கட்சியில் இருந்து விலகுவதாக அண்ணாமலை கூறியுள்ளார். அதற்கு அவர்கள் சிறிது காலம் காத்திருங்கள், கட்சியில் உரிய அங்கீகாரம் தருவதாகத் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அண்ணாமலை பாஜகவிற்கு ‘குட்பை’ சொல்வதில் உறுதியாக உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் அண்ணாமலை கட்சியில் இருந்து விலகுவதாகக் கூறி ஐந்து பக்கக் கடிதத்தை பாஜக தேசியத் தலைவர் நிதின் காபினிடம் வழங்கியதாகக் கூறினாலும், அதுபற்றிய அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில் தான் அண்ணாமலை தொடங்கும் கட்சி குறித்த சில முக்கியத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அண்ணாமலை அனைத்து ஜாதி, மதங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் கட்சியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளாராம். பாஜக இந்து மதத்தினருக்கும், இந்து மதம் சார்ந்த நடைமுறைகளைக் காக்கவும் முன்னுரிமை வழங்கும் நிலையில், அந்த நிலைப்பாட்டில் இருந்து அண்ணாமலை விலகிச் செயல்படத் திட்டமிட்டுள்ளாராம். அதன்படி மதச்சார்பற்றதாகவும், தேசியப் பார்வையுடனும் கூடிய கட்சியாகத் தன்னை முன்னிறுத்த அவர் திட்டமிட்டுள்ளாராம். அதுமட்டுமின்றி திராவிடக் கட்சிகளின் சாயலையும் கட்சிக்குள் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளராம்.
திமுக, அதிமுகவைப் போல் தமிழக நலனை முதன்மைப்படுத்திச் செயல்பட வேண்டும். அதேபோல் சிறுபான்மையினராக உள்ள கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களை அரவணைத்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளராம். இதற்காக அனைத்து மதத்தினரையும் தமிழர் என்ற அடையாளத்தின் கீழ் கொண்டு வர அவர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாஜகவிற்குப் பொதுவாகவே இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களின் வாக்குகள் அதிகம் கிடைக்காது. பாஜக தங்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதாக இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் நினைப்பது தான் இதற்குக் காரணம். இதனால் பாஜகவில் இருந்து விலகி வரும் தன்மீது இத்தகைய முத்திரை குத்தப்பட்டு விடக்கூடாது என்பதில் அண்ணாமலை தெளிவாக உள்ளாராம். அதாவது சிறுபான்மையினருக்கு எதிரானவர் என்பதைத் தொடக்கத்திலேயே உடைக்க அண்ணாமலை நினைக்கிறார்.
ஏனென்றால் தமிழக மக்கள்தொகையில் சுமார் பதின்மூன்று சதவீதம் முதல் பதினாறு சதவீதம் பேர் சிறுபான்மையினராக உள்ளனர். குறிப்பாக ஒவ்வொரு தேர்தலிலும் அவர்களில் பெரும்பான்மையானவர்கள் தேர்தலில் வாக்களித்து விடுகின்றனர். இதனால் தேர்தல் அரசியலில் வெற்றி பெற வேண்டும் என்றால் அவர்களின் ஆதரவு என்பது நிச்சயம் தேவை. இதனால் சிறுபான்மை, பெரும்பான்மை என்று அனைத்து மதத்தினரையும் தமிழர் என்ற அடிப்படையில் ஒருங்கிணைத்துச் செயல்பட அவர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.