டெல்லி: வெளிநாட்டில் இருந்து இந்தியா வருபவர்கள் பதினெண்பது நாட்களுக்கு மேல் அதாவது ஆறு மாதங்களுக்கு மேல் தங்குவதாக இருந்தால், அவர்கள் இந்திய குடியேற்றப் பிரிவு அலுவலகத்தில் தங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
பதினெண்பது நாட்கள் முடிவதற்குள் பதிவு செய்யத் தவறினால், விசா விதிகளை மீறியதாகக் கருதப்பட்டு அபராதம் விதிக்கப்படும். முன்னதாக பதினெண்பது நாட்கள் முடிந்த பிறகு அடுத்த பதினான்கு நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும் என்ற விதிமுறை இருந்தது.
ஒருவேளை பதினெண்பது நாட்களுக்கு மேல் தங்கிய பிறகுதான் பதிவு செய்ய முடிகிறது என்றால், அதற்குப் பலத்த மருத்துவ அவசரம் அல்லது தவிர்க்க முடியாத அரசு காரணங்கள் போன்ற ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து ஆதாரங்களும் சரிபார்க்கப்பட்ட பிறகுதான் அவகாசம் வழங்கப்படும்.
பழைய விதியின்படி, இந்தியாவில் வசிக்கும் கணவன் மனைவியில் ஒருவர் வெளிநாட்டுக்காரராகவும், மற்றொருவர் இந்தியராகவும் இருந்தால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு முப்பது நாட்களுக்குள் ஆன்லைனில் அரசுக்குத் தகவல் தெரிவித்து விசா அல்லது வெளியேறும் அனுமதி வாங்க வேண்டும் என்று இருந்தது.
புதிய விதியில், பெற்றோர் இருவரில் ஒருவர் இந்தியராக இருந்து, குழந்தைக்கு இந்தியக் குடியுரிமை போதும் என்று நினைத்தால், இந்த முப்பது நாள் கட்டாயப் பதிவு தேவையில்லை.
ஆனால் பிற்காலத்தில் அந்தக் குழந்தைக்கு வேறொரு நாட்டின் குடியுரிமையோ அல்லது வெளிநாட்டுப் பாஸ்போர்ட்டோ வாங்கினால் விதிமுறைகள் மாறும். குழந்தைக்கு வெளிநாட்டுப் பாஸ்போர்ட் வாங்கிய முப்பது நாட்களுக்குள், பெற்றோர் கட்டாயமாக அந்தத் தகவலை இந்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும்.
மேலும், வெளிநாட்டு நோயாளிகளுக்குத் தங்கும் வசதிகளைக் கொடுக்கும் எல்லா மருத்துவமனைகளும், அவர்கள் எப்போது வந்தார்கள், என்ன சிகிச்சை பெறுகிறார்கள், எப்போது டிஸ்சார்ஜ் ஆகிறார்கள் என்ற விபரங்களை அரசின் ஆன்லைன் அமைப்பில் துல்லியமாகப் பதிவு செய்ய வேண்டும்.
இதன் மூலம் வெளிநாட்டினர் சிகிச்சையின் பெயரில் சட்டவிரோதமாகத் தங்குவது தடுக்கப்படும்.
இந்த புதிய விதிமுறைகள் வெளிநாட்டினர் இந்தியாவில் தங்குவதைத் துல்லியமாகக் கண்காணிக்க உதவும். குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் கூறுவதன்படி, இது சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கவும், தேசிய பாதுகாப்பை உறுதி செய்யவும் உதவும்.