மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்தியாவின் வரலாற்றில் மிக நீண்ட காலம் பதவி வகித்த பிரதமராக சாதனை படைத்திருப்பதை பாராட்டியுள்ளார்.

அவர் குறிப்பிட்டதாவது, தொடர்ந்து 4,399 நாட்கள் பிரதமராகப் பணியாற்றிய மோடி அவர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்களில் மிக நீண்ட காலம் பதவி வகித்த தலைவராக வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். இது நமது தேசத்தின் சாதனை சரித்திரத்தில் ஒரு மாபெரும் மைல்கல் என்றும், வளர்ச்சியடைந்த பாரதத்தின் நீண்ட பயணத்தின் முக்கிய அடையாளம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மக்கள் பணியே மகேசன் பணி என வாழும் மக்கள் தலைவருக்கு, பாரத மக்கள் அளித்த மகுடம் இது என அவர் கூறினார். கடந்த 12 ஆண்டுகளில் பாரத நாடு மிகப் பெரும் மாற்றங்களை கண்டுள்ளது. அந்த மாற்றங்களின் மையப்புள்ளியாக பிரதமர் மோடி அவர்கள் திகழ்கிறார்.

ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நலனை மேம்படுத்த மத்திய அரசு தொடர்ந்து பெரும் பங்காற்றி வருவதாகவும், பல ஆண்டுகளாக வளர்ச்சியின் பலன்களை பெறாமல் விளிம்பு நிலையில் இருந்த மக்களுக்கு இன்று அனைத்து உதவிகளும் நேரடியாகக் கிடைக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

பாரதம் உலகின் குருவாய் தலைமை ஏற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும், மோடி அவர்களின் தலைமையில் நாடு இன்னும் பல்லாண்டுகள் வெற்றி நடைபோடும் என்றும் எல்.முருகன் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.