அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு கத்தார் அரச குடும்பம் வழங்கிய அதிநவீன சொகுசு விமானம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த விமானத்தை “பறக்கும் வெள்ளை மாளிகை” என்று டிரம்ப் வர்ணித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கத்தார் அரச குடும்பம் வழங்கிய இந்த பிரம்மாண்ட போயிங் 747-8 விமானம், மேம்படுத்தப்பட்ட ஏர் போர்ஸ் ஒன் வகை விமானமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தில் உள்ள கூட்டு ராணுவ தளத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் இந்த விமானம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், விமானத்தின் வடிவமைப்பு, தொழில்நுட்ப வசதிகள் மற்றும் ஆடம்பர அம்சங்களை வெகுவாகப் பாராட்டினார். “வெறும் 10 மாதங்களில் இந்த விமானம் யாரும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு மாற்றப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு சாதாரண விமானம் அல்ல. வானில் பறக்கும் வெள்ளை மாளிகையைப் போல காட்சியளிக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.

இந்த விமானத்தில் உலகத் தரத்திலான பல வசதிகள் இடம்பெற்றுள்ளன. அதிநவீன படுக்கையறை, தனி ஓய்வறை, உயர்மட்ட ஆலோசனைக் கூட்டங்களுக்கு பிரத்யேக அறை, பளிங்குக் கற்களால் அலங்கரிக்கப்பட்ட குளியலறைகள், பிரம்மாண்ட படிக்கட்டுகள் உள்ளிட்ட வசதிகள் இதில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஜனாதிபதி பயணத்திற்கேற்ற வகையில் பாதுகாப்பு மற்றும் தொடர்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

இந்த விமானத்தின் மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் ரூ.3,413 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. அதனால் இது உலகின் மிக விலையுயர்ந்த அரசியல் தலைவர்களுக்கான விமானங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

ஆனால் இந்த பரிசு அரசியல் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. எதிர்க்கட்சிகள், வெளிநாட்டு அரச குடும்பத்திடமிருந்து இவ்வளவு விலையுயர்ந்த பரிசை ஏற்றுக்கொள்வது ஒழுங்கு நெறிமுறைகளுக்கு எதிரானது என்றும், இது ஒரு வகையான மறைமுக லஞ்சமாக பார்க்கப்படலாம் என்றும் விமர்சனம் செய்துள்ளன.

இதற்கு பதிலளித்த அமெரிக்க பாதுகாப்புத்துறை, இந்த விமானம் தனிப்பட்ட முறையில் டிரம்புக்கு வழங்கப்படவில்லை என்றும், அமெரிக்க விமானப்படையின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டதாகவும் விளக்கம் அளித்தது. பின்னர் இது ஜனாதிபதி நூலக அறக்கட்டளைக்கு மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், “கத்தார் பதிலுக்கு ஏதாவது கேட்டதா என்று கேட்பது பொருத்தமற்றது. இது அவர்களின் உயர்ந்த மனப்பான்மையின் வெளிப்பாடு. இவ்வளவு மதிப்புமிக்க பரிசை வேண்டாம் என்று சொன்னால் நான்தான் முட்டாளாக இருப்பேன்” என்று தெரிவித்தார்.

மேலும், “சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் உள்ளிட்ட பல நாடுகளுடன் அமெரிக்கா நீண்டகால உறவை கொண்டுள்ளது. அவர்களுக்கு நாங்கள் தொடர்ந்து உதவி செய்து வருகிறோம். இந்த பரிசும் அந்த நட்புறவின் அடையாளம்” என்றார்.

எனினும், இந்த புதிய விமானம் தற்போதைய ஏர் போர்ஸ் ஒன் விமானத்திற்கு இணையான பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளதா என்பது குறித்து இன்னும் முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. அணு ஆயுத தாக்குதல்களை எதிர்கொள்ளும் திறன், ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள், வானிலேயே எரிபொருள் நிரப்பும் வசதி போன்ற முக்கிய பாதுகாப்பு அம்சங்களை இதில் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய விமானத்தின் வால் பகுதியில் அமெரிக்க தேசியக் கொடி வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் கடந்த நாற்பது ஆண்டுகளாக அமெரிக்க ஜனாதிபதிகளை ஏற்றி சென்ற பழைய விமானத்திற்கு விடை கொடுக்கப்பட்டு, புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.