அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பா மாவட்டத்தில் இன்று அதிகாலை நிகழ்ந்த கோர சாலை விபத்தில் குழந்தை மற்றும் மாணவர் என 2 பேர் உயிரிழந்ததுடன், 16 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் சொகுசு பேருந்து ஒன்று திருப்பதியில் இருந்து கடப்பா நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது. இன்று அதிகாலை சுமார் 1 மணி அளவில் கடப்பா மாவட்டம் உடுமுவாரிபள்ளி கிராமம் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த சரக்கு லாரி மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் பேருந்தின் வலது பக்கத்தில் இருந்த பல இருக்கைகள் கடுமையாக சேதமடைந்தன. அந்த பகுதியில் அமர்ந்திருந்த ஒரு குழந்தை மற்றும் ஒரு மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், 16 பயணிகள் மற்றும் லாரி ஓட்டுநர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் மற்றும் மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு ராஜம்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் அருகிலுள்ள பிற மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து நடந்தபோது பேருந்தில் சுமார் 27 பயணிகள் இருந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ஆந்திரப் பிரதேச போக்குவரத்துத் துறை அமைச்சர் எம். ராம்பிரசாத் ரெட்டி, உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதுடன், தேவையானால் உயர் மருத்துவ மையங்களுக்கு மாற்றவும் அறிவுறுத்தினார்.

மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமல் தடுக்க சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.