சென்னையில் வரும் செப்டம்பர் 17 முதல் 20 வரை நடைபெற உள்ள சர்வதேச வேளாண் வர்த்தக மாநாடு மற்றும் கண்காட்சி, இந்திய விவசாயத்தையும் உலக சந்தையையும் இணைக்கும் மிகப்பெரிய நிகழ்வாக உருவெடுக்க உள்ளது. இந்த மாநாட்டை கிராப் நெக்ஸா (Crop Nexa) அமைப்பு நடத்துகிறது. விவசாயிகள், வேளாண் தொழில் முனைவோர், ஏற்றுமதியாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் உலகளாவிய வர்த்தக பிரதிநிதிகள் ஒரே மேடையில் சந்திக்கும் அரிய வாய்ப்பாக இந்த நிகழ்வு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய வேளாண் துறையை சர்வதேச அளவில் முன்னேற்றும் நோக்கில் நடைபெறும் இந்த மாநாட்டில், வேளாண்மை, உணவு பதப்படுத்துதல், ஏற்றுமதி, தொழில்நுட்பம், முதலீடு மற்றும் உலகளாவிய சந்தை வாய்ப்புகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. குறிப்பாக, இந்திய விவசாயப் பொருட்களை உலக சந்தைக்கு கொண்டு செல்லும் புதிய வாய்ப்புகள் குறித்து முக்கிய அமர்வுகள் நடைபெறவுள்ளன.

இந்த மாநாட்டில் இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த விவசாயிகள், வேளாண் உற்பத்தியாளர் நிறுவனங்கள் (FPOs), வேளாண் ஆராய்ச்சியாளர்கள், பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

மாநாட்டின் முக்கிய அம்சங்களில் சர்வதேச வேளாண் மற்றும் வேளாண் வணிக கண்காட்சி, உலகளாவிய வாங்குபவர் – விற்பனையாளர் சந்திப்பு, வேளாண் ஏற்றுமதி மற்றும் சர்வதேச வர்த்தக கருத்தரங்குகள், உணவு பதப்படுத்தல் தொழில்நுட்ப காட்சியகம், வேளாண் ஸ்டார்ட்அப் மற்றும் புதுமை கண்டுபிடிப்பு அரங்கம், துல்லிய வேளாண்மை தொழில்நுட்ப மையம் மற்றும் முதலீட்டு இணைப்பு நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

இந்த நிகழ்வின் மூலம் விவசாயிகள் புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளலாம். அதேபோல், ஏற்றுமதி சந்தைகளுடன் நேரடி தொடர்புகளை உருவாக்கும் வாய்ப்பும் கிடைக்கும். மதிப்புக்கூட்டப்பட்ட விவசாயம், உணவு பதப்படுத்துதல், நவீன விவசாய கருவிகள், டிஜிட்டல் வேளாண்மை மற்றும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள் போன்றவை குறித்து நேரடி விளக்கங்களும் வழங்கப்பட உள்ளன.

மேலும், அரசுத் திட்டங்கள், மானியங்கள், நிதி உதவிகள் மற்றும் தொழில் தொடங்குவதற்கான முதலீட்டு வாய்ப்புகள் பற்றிய தகவல்களும் விவசாயிகளுக்கு வழங்கப்படும். தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் நேரடியாக சந்தித்து தொழில் வளர்ச்சிக்கான புதிய ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பும் இந்த மாநாட்டின் மூலம் உருவாகும்.

தமிழகத்தை சர்வதேச வேளாண் வர்த்தக மையமாக மாற்றும் நோக்கில் நடைபெறும் இந்த மாநாடு, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கும், வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இளைஞர்கள், வேளாண் தொழில் முனைவோர் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு இது புதிய வாயில்களை திறக்கக்கூடிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

விவசாயிகள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில் முனைவோர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த சர்வதேச மாநாட்டில் பங்கேற்று பயன் பெற வேண்டும் என கிராப் நெக்ஸா அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இந்திய வேளாண் துறையின் எதிர்கால வளர்ச்சியை நிர்ணயிக்கும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக இந்த மாநாடு அமையும் என நம்பப்படுகிறது.