கொச்சி:

போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிரான நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும் நோக்கில், தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தி கேரள முதல்-மந்திரி வி.டி. சதீசன் முக்கிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

கேரளத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. இதனைத் தொடர்ந்து முதல்-மந்திரியாக பொறுப்பேற்ற வி.டி. சதீசன், மாநிலத்தில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.

அந்த வகையில், “ஆபரேஷன் டூபான்” என்ற பெயரில் மாநிலம் முழுவதும் சிறப்பு போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையின் மூலம் பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தல் என்பது ஒரு மாநிலத்தின் எல்லைக்குள் மட்டும் கட்டுப்படுத்த முடியாத பிரச்சினை என்பதால், மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியம் என கேரள அரசு கருதுகிறது. இதன் அடிப்படையில் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநில அரசுகளுக்கு கேரள முதல்-மந்திரி கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் பல மாநிலங்களில் பரவி செயல்பட்டு வருவதால், அவற்றை முறியடிக்க மாநில காவல்துறைகள் மற்றும் உளவுத்துறைகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தகவல் பரிமாற்றத்தை விரைவுபடுத்துதல், கூட்டு சோதனைகள் நடத்துதல், எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை அதிகரித்தல் மற்றும் குற்றவாளிகள் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகள் முக்கியம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பயன்பாடு குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வருவது சமூகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும், இதை கட்டுப்படுத்த மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும், சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதன் மூலம் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளை விரைவாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் கேரள முதல்-மந்திரி தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் ஒழிப்பை ஒரு மாநிலத்தின் தனிப்பட்ட பொறுப்பாக அல்லாமல், தேசிய அளவிலான சமூகப் பொறுப்பாக கருதி அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற கருத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கேரள அரசின் இந்த முயற்சி, தென்னிந்திய மாநிலங்களுக்கிடையேயான பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இதற்கு அண்டை மாநிலங்கள் எவ்வாறு பதிலளிக்கின்றன என்பது அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.