சென்னை:
புதிய வாகனங்களுக்கு விருப்பமான அல்லது சிறப்பு பதிவு எண்களை பெறுவதற்கான கட்டணத்தை கணிசமாக உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான வரைவு அறிக்கையை அரசிதழில் வெளியிட்டு, பொதுமக்களின் கருத்துக்களையும் அரசு வரவேற்றுள்ளது.
பொதுவாக புதிய இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வாங்கும் போது, அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலகம் (RTO) மூலம் வாகனங்களுக்கு பதிவு எண்கள் ஒதுக்கப்படுகின்றன. இந்த பதிவு நடைமுறையில் நிர்ணயிக்கப்பட்ட பதிவு கட்டணம் மற்றும் சேவை கட்டணங்கள் மட்டுமே வசூலிக்கப்படுகின்றன.
ஆனால், சிலர் தங்களுக்கு பிடித்த எண்கள் அல்லது அதிர்ஷ்ட எண்கள் என கருதப்படும் குறிப்பிட்ட பதிவு எண்களை பெற விரும்புகின்றனர். இத்தகைய எண்கள் “பேன்சி நம்பர்” அல்லது சிறப்பு பதிவு எண்கள் என அழைக்கப்படுகின்றன. இதற்காக கூடுதல் கட்டணம் செலுத்தி அந்த எண்களை பெறும் வசதி நடைமுறையில் உள்ளது.
தற்போது இந்த சிறப்பு எண்களுக்கான கட்டணத்தை உயர்த்தும் வகையில் தமிழக அரசு புதிய வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, அரசால் ஒதுக்கப்படும் முன்பதிவு மற்றும் சிறப்பு பதிவு எண்களுக்கு தற்போது வசூலிக்கப்படும் கட்டணங்கள் பல இடங்களில் இருமடங்காக உயர்த்தப்பட உள்ளன.
தற்போதைய வரிசை மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் மூன்று வரிசைகளில் உள்ள சிறப்பு எண்களை பெற தற்போது ரூ.40,000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தை ரூ.80,000 ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.
அதேபோல், 5 முதல் 8-வது வரிசை வரை உள்ள சிறப்பு எண்களுக்கான கட்டணம் ரூ.60,000-இல் இருந்து ரூ.1.20 லட்சமாக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மிகவும் விருப்பமான மற்றும் அதிக தேவை உள்ள சில சிறப்பு எண்களுக்கு ரூ.8 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்படலாம் என்றும் வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கான கட்டண முறையிலும் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. வாகனத்தின் மதிப்பை அடிப்படையாக கொண்டு ரூ.2,000 முதல் ரூ.1 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வாகனங்களுக்கு ரூ.2,000 கட்டணமும், ரூ.30 லட்சம் மதிப்புள்ள வாகனங்களுக்கு ரூ.1 லட்சம் கட்டணமும் வசூலிக்கப்படும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் மற்றும் பிற சொகுசு வாகனங்களுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.1.50 லட்சம் வரை கட்டணம் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வு தொடர்பான வரைவு அறிக்கை குறித்து பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் கருத்துகள், ஆலோசனைகள் மற்றும் எதிர்ப்புகள் இருந்தால் அவற்றை ஜூலை 3-ஆம் தேதிக்குள் உள்துறை செயலாளருக்கு அனுப்பலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த புதிய கட்டண உயர்வு அமலுக்கு வந்தால், விருப்பமான பதிவு எண்களை பெற விரும்பும் வாகன உரிமையாளர்கள் கூடுதல் செலவை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.