அருப்புக்கோட்டை:
சட்டப்பேரவையில் தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் தனிநபர் விமர்சனங்களில் ஈடுபடுவது ஜனநாயக மரபுகளுக்கு எதிரானது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள எம்.ரெட்டியபட்டியில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் பல்வேறு அரசியல் மற்றும் நிர்வாக விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை நாட்டிலேயே சிறப்பும் மரியாதையும் பெற்ற சட்டமன்றமாக திகழ்கிறது என்று குறிப்பிட்ட அவர், மக்கள் அதிகாரத்தின் இறையாண்மையை பிரதிபலிக்கும் இடமாக சட்டப்பேரவை இருக்க வேண்டும் என்றார். கடந்த காலங்களில் ஆளுநர் சட்டப்பேரவையை அலட்சியப்படுத்தியபோது தமிழக மக்கள் அதற்கு உரிய பதிலடி கொடுத்ததாகவும் நினைவுகூர்ந்தார்.
சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் தனிப்பட்ட முறையில் தாக்குவது, உடல் மொழி மூலம் இழிவுபடுத்துவது அல்லது பண்பு தவறிய வார்த்தைகளை பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவர் தெரிவித்தார். குறிப்பாக உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்கள் கூடுதல் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
முதல்வர் விஜய் சமீபத்தில் சட்டப்பேரவையில் கூறிய சில கருத்துகளையும், அதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் பேச்சையும் குறிப்பிட்ட வீரபாண்டியன், இருவரின் கருத்துகளும் தனிப்பட்ட விமர்சனங்களாக அமைந்ததாக கூறினார். மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டிய நிலையில், தனிநபர் குறித்த கருத்துக்கள் அவசியமற்றவை என்றார்.
மேலும், மத்திய அரசுடன் நிர்வாக ரீதியாக மோதல் இல்லாமல் செயல்பட வேண்டும் என்ற முதல்வர் விஜய்யின் நிலைப்பாட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பதாகவும் தெரிவித்தார். அதே நேரத்தில் மாநில உரிமைகள் பாதிக்கப்படும் சூழலில் தமிழக அரசு உறுதியுடன் குரல் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மத்திய அரசு மாநிலங்களை கீழ்மட்ட நிர்வாக அமைப்பாக கருதாமல் சம உரிமையுடன் அணுக வேண்டும் என அவர் கூறினார். கடந்த காலங்களில் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நிதி மற்றும் திட்ட உதவிகளில் ஏற்பட்ட பிரச்சினைகளே மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கு காரணமாக அமைந்ததாகவும் தெரிவித்தார்.
புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை குறித்தும் வீரபாண்டியன் கவலை தெரிவித்தார். தமிழ்நாட்டில் பணியாற்றும் லட்சக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்களின் ஊதியம், கல்வி, மருத்துவம் மற்றும் வாழ்வாதார நிலை குறித்து விரிவான ஆய்வு நடத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அரசின் கடன் சுமை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், மத்திய அரசின் கடனுடன் ஒப்பிடுகையில் மாநில அரசின் கடன் குறைவாக இருப்பதாக கூறினார். உற்பத்தித் திறனை அதிகரித்து தற்சார்பு பொருளாதாரத்தை உருவாக்குவதன் மூலம் கடன் சுமையை குறைக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
கல்வித்துறையை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்டிய அவர், ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை அரசு கல்வி நிறுவனங்கள் தரமான வளர்ச்சியை அடைய வேண்டும் என்றும், அதற்கான முயற்சிகளுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவு அளிக்கும் என்றும் கூறினார்.