மும்பை:

தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) தொடர்பான புதிய திருத்தங்களுக்கு எதிராக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், அவை திரும்பப் பெறப்படாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மகாராஷ்டிராவில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நடைமுறை விதிகளில் சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் தகவல் பெறும் நடைமுறையை கடினமாக்கும் என்றும், சட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே பாதிக்கும் என்றும் பல சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

புதிய விதிகளின்படி, தகவல் அறியும் உரிமை மனு தாக்கல் செய்ய செலுத்தப்படும் கட்டணம் ரூ.10-இல் இருந்து ரூ.30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், மனுதாரர்கள் தங்களது கோரிக்கைகளை 150 வார்த்தைகளுக்குள் பதிவு செய்ய வேண்டும் என்றும், அதனுடன் அடையாள அட்டை நகலையும் கட்டாயமாக இணைக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அன்னா ஹசாரே முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது அரசுக்கு வருவாய் ஈட்டும் கருவி அல்ல என்றும், மக்களுக்கு வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்ய உருவாக்கப்பட்ட ஜனநாயக உரிமை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கட்டணத்தை மூன்று மடங்கு உயர்த்தியிருப்பது சாதாரண மக்களை தகவல் கேட்கும் நடைமுறையிலிருந்து விலகச் செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், தவறான தகவல்களை வழங்கும் அதிகாரிகளுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை உயர்த்தாதது ஏன் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

அடையாள அட்டையை கட்டாயமாக இணைக்க வேண்டும் என்ற புதிய விதி குறித்தும் அன்னா ஹசாரே கவலை தெரிவித்துள்ளார். ஊழல் மற்றும் முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை இந்த விதி பாதிக்கக்கூடும் என்றும், அவர்களின் அடையாளம் வெளிப்படுவதால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், RTI வழக்குகளின் விசாரணையின்போது வக்கீல் உதவியை பெறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என அவர் தெரிவித்துள்ளார். இதுபோன்ற நடவடிக்கைகள் சட்டத்தின் வெளிப்படைத்தன்மையையும், மக்களின் உரிமைகளையும் குறைக்கும் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

1998 முதல் தகவல் அறியும் உரிமை இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வரும் அன்னா ஹசாரே, 2005-ம் ஆண்டு RTI சட்டம் அமலுக்கு வருவதற்கான பல்வேறு போராட்டங்களில் முக்கிய பங்காற்றியவர். 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மேற்கொள்ளப்படும் இந்த திருத்தங்கள் சட்டத்தின் அடிப்படை நோக்கத்தை பலவீனப்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார்.

எனவே, இந்த புதிய விதிமுறைகளை மகாராஷ்டிரா அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் ஜூலை 5-ம் தேதி முதல் அகில்யாநகர் மாவட்டத்தில் உள்ள ராலேகான் சித்தி யாதவ் பாபா கோவிலில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்குவேன் என்று அறிவித்துள்ளார்.

இந்த விவகாரம் மகாராஷ்டிரா அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.