சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் 173-வது திரைப்படமான ‘தர்மன்’ படத்தின் தலைப்பு வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, நடிகை சிம்ரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் ரஜினிகாந்த் பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
மேடையில் பேசிய ரஜினிகாந்த், “நான் பேசினாலே பிரச்சினை தான். அது எனக்கும் பிரச்சினை, உங்களுக்கும் பிரச்சினை. பேசாமல் இருந்தால், ‘வாயில் கொழுக்கட்டை வைத்திருக்கிறாரா?’ என்பார்கள். பேசினால், ‘இப்போதுதான் பேசுகிறார்’ என்பார்கள். சிலர் ‘பேசாமலே இருந்திருக்கலாம்’ என்பார்கள்” என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “எனக்கு பல ஆண்டுகள் கழித்துதான் ஒரு உண்மை புரிந்தது. நம்மை பிடிக்காதவர்களுக்கு நாம் எது செய்தாலும் பிடிக்காது. நம்மை பிடித்தவர்களுக்கு நாம் செய்யும் எல்லாமே பிடிக்கும் என்று நினைப்பதும் தவறு. அதனால் எப்போதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” என்றார்.
‘தர்மன்’ படத்தின் இயக்குநர் தேர்வு குறித்து பேசிய ரஜினிகாந்த், “இந்த படத்திற்கு நான்காவது இயக்குநராக அஸ்வத் மாரிமுத்து வந்திருக்கிறார். முதலில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்குவதாக இருந்தது. பின்னர் சுந்தர்.சி, அதன் பிறகு சிபி சக்கரவர்த்தி என பல மாற்றங்கள் நடந்தன. சிபி கூறிய கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அது அணு விஞ்ஞானியை மையமாக கொண்ட சென்சிட்டிவான கதை. அதற்கு அதிக நேரம் தேவைப்பட்டதால் தள்ளி வைக்கப்பட்டது” என்று கூறினார்.
அஸ்வத் மாரிமுத்து குறித்து பாராட்டிய ரஜினி, “‘டிராகன்’ படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் அவருடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.
நடிகை சிம்ரன் குறித்து பேசிய அவர், “‘பேட்ட’ படத்திற்கு பிறகு மீண்டும் சிம்ரனுடன் இணைந்து நடிக்கிறேன். இது மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் முக்கிய தருணமாக, கமல்ஹாசனுடனான தனது நட்பை பற்றி ரஜினிகாந்த் மனம் திறந்து பேசினார். “கமல் எனக்கு செய்த உதவிகளையும், கொடுத்த ஊக்கத்தையும் வார்த்தைகளில் சொல்ல முடியாது. 1975-களில் கமல் மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்தார். அப்போது தான் நான் சினிமாவுக்கு வந்தேன். ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்தில் முதலில் ஜெய் கணேஷ் நடிக்க இருந்தார். ஆனால் கமல்தான் இயக்குநர் ஸ்ரீதரிடம் பேசி அந்த வாய்ப்பை எனக்கு வாங்கிக் கொடுத்தார்” என்று நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்.
ரஜினியின் இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக, “நம்மை பிடிக்காதவர்களுக்கு எது செய்தாலும் பிடிக்காது” என்ற அவரது கருத்து சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
‘தர்மன்’ திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.