சென்னை:
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கடல் உணவு பதப்படுத்தும் நிறுவனத்தில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஜூன் 21-ஆம் தேதி பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வந்த கடல் உணவு ஏற்றுமதி நிறுவனத்தில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் 74 வடமாநில தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
முதற்கட்டமாக 9 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், நேற்று ஒடிசாவைச் சேர்ந்த சுபாசி ஜூவாங்ஸ் (24) என்பவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.
இந்நிலையில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒடிசாவைச் சேர்ந்த ரீட்டா ஜூவாங்கா (28) இன்று காலை உயிரிழந்தார். தொடர்ந்து மேலும் ஒரு பெண் தொழிலாளியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் அமோனியா வாயு கசிவு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் இரண்டு 15 வயது சிறுமிகளும் இடம்பெற்றிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழிற்சாலையின் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் விபத்திற்கான காரணங்கள் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.