வேலூர்:
சத்குருவின் “மண் காப்போம்” இயக்கம் சார்பில், விவசாயிகள் மற்றும் இயற்கை வேளாண் ஆர்வலர்களுக்காக “பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா” என்ற தலைப்பில் மாபெரும் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி வரும் ஜூன் 28-ஆம் தேதி வேலூரில் நடைபெற உள்ளது. வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ள இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான விவசாயிகள், வேளாண் நிபுணர்கள் மற்றும் விதை பாதுகாவலர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிகழ்வு தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு வேலூர் டோல்கேட் பகுதியில் உள்ள ஈஷா யோக மையத்தில் நடைபெற்றது. இதில் மண் காப்போம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா, விதைத்தீவு பிரியா ராஜநாராயணன் மற்றும் மகிழ்வனம் மரபு விதைகள் சேகரிப்பு மையத்தின் நிறுவனர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியின் நோக்கங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து விளக்கமளித்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய சுவாமி ஸ்ரீமுகா, தற்போதைய காலகட்டத்தில் நஞ்சில்லா உணவு உற்பத்தியும், விவசாயிகளின் பொருளாதார தற்சார்பும் மிக அவசியமானதாக மாறியுள்ளதாக தெரிவித்தார். பாரம்பரிய விதைகள் மற்றும் இயற்கை விவசாய முறைகள் மூலம் செலவை குறைத்து அதிக லாபம் பெறும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு நேரடி வழிகாட்டுதல் வழங்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.
இந்த கருத்தரங்கில் நாட்டின் முன்னணி வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்களைச் சேர்ந்த நிபுணர்கள், அனுபவமிக்க இயற்கை விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோர் பங்கேற்று தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உள்ளனர். உற்பத்தி முதல் சந்தைப்படுத்தல் வரை முழுமையான விவசாய மேலாண்மை குறித்து விரிவான ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன.
இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக பிரம்மாண்ட விதை மற்றும் காய்கறி கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட 2,000-க்கும் மேற்பட்ட பாரம்பரிய விதை ரகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. மேலும் இயற்கை விளைபொருட்கள், பாரம்பரிய காய்கறிகள், மதிப்புக்கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் வேளாண் தொழில்நுட்பங்கள் தொடர்பான 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படவுள்ளன.
விதை பாதுகாவலர்கள், இயற்கை விவசாயிகள் மற்றும் வேளாண் தொழில்முனைவோர்கள் தங்களது தயாரிப்புகள் மற்றும் அனுபவங்களை நேரடியாக பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு புதிய சந்தை வாய்ப்புகளையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்வின் மற்றொரு சிறப்பம்சமாக “விதை பாதுகாவலர் விருதுகள் – 2026” வழங்கப்பட உள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அரிய பாரம்பரிய விதைகளை சேகரித்து பாதுகாத்து வரும் முன்னோடி விதை பாதுகாவலர்களை கௌரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. சுமார் 10 முக்கிய விதை பாதுகாவலர்கள் இந்த விருதின் மூலம் பாராட்டப்பட உள்ளனர்.
பாரம்பரிய விதைகள் அழிந்து வரும் இக்காலத்தில் அவற்றை மீட்டெடுத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றும் வழிமுறைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.
சுமார் 2,500-க்கும் மேற்பட்டோர் இந்த திருவிழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புவோர் முன்பதிவு செய்ய வேண்டும் என்றும், கூடுதல் தகவல்களுக்கு 83000 93777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.