ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வருவது கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, நடப்பாண்டில் 48 அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் ஒரு மாணவர் கூட சேராதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலை மாவட்டமான நீலகிரியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் 352 ஆரம்பப் பள்ளிகள், 93 நடுநிலைப் பள்ளிகள், 49 உயர்நிலைப் பள்ளிகள், 8 அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகள், 5 பகுதி அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகள், 3 ஆதிதிராவிடர் பள்ளிகள், ஒரு சமூக நலப்பள்ளி, 32 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 10 அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் ஒரு பகுதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி என மொத்தம் 554 கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கடந்த கல்வியாண்டுடன் ஒப்பிடும்போது அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கல்வியாளர்கள் வழங்கிய தகவலின்படி, 2025-26 கல்வியாண்டில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை 2,183 மாணவர்கள் படித்து வந்த நிலையில், 2026-27 கல்வியாண்டில் அந்த எண்ணிக்கை 1,689 ஆக குறைந்துள்ளது. இதனால் ஆரம்ப நிலை வகுப்புகளில் மட்டும் 494 மாணவர்கள் அரசு பள்ளிகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
அதேபோல், 1 முதல் 12-ம் வகுப்பு வரை கடந்த கல்வியாண்டில் 35,446 மாணவர்கள் கல்வி கற்ற நிலையில், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 32,437 ஆக சரிந்துள்ளது. மொத்தமாக 3,009 மாணவர்கள் அரசு பள்ளிகளில் இருந்து விலகியிருப்பது கல்வித்துறைக்கு புதிய சவாலாக உருவெடுத்துள்ளது.
மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த அளவிலான சரிவு கல்வியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இலவச பாடப்புத்தகங்கள், சீருடைகள், மிதிவண்டி, காலை உணவு திட்டம், மதிய உணவு திட்டம் உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்பட்டாலும் மாணவர் சேர்க்கை குறைவது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் உள்ள 48 அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் ஒரு மாணவர் கூட சேர்க்கப்படவில்லை என்பது மிகப்பெரிய கவலையாக பார்க்கப்படுகிறது. ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அப்புகோடு அரசு பள்ளி, குன்னூர் ஊராட்சி ஒன்றியத்தின் காந்திபேட்டை பள்ளி, கோத்தகிரி ஒன்றியத்தின் பேரகனி பள்ளி மற்றும் கூடலூர் ஒன்றியத்தின் ஆத்தூர் பள்ளி உள்ளிட்ட பல கல்வி நிலையங்களில் புதிய மாணவர்கள் சேர்க்கை இல்லாத நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலை குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். மலைப்பகுதிகளில் மக்கள் தொகை குறைவு, மாணவர்களின் இடமாற்றம் மற்றும் அருகிலுள்ள பெரிய பள்ளிகளில் சேர்க்கை அதிகரித்தது போன்ற காரணங்களால் சில பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் இருந்து அருகிலுள்ள கல்வி நிறுவனங்களுக்கு மாணவர்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். வனப்பகுதிகளில் வசிக்கும் மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்ல வனத்துறையின் ஒத்துழைப்புடன் வாகன வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
பழங்குடியின மாணவர்களிடையே காணப்படும் இடைநிற்றலை குறைப்பதற்கும், மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கும் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.
எனினும், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வருவது எதிர்காலத்தில் சில பள்ளிகள் மூடப்படும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என கல்வியாளர்கள் எச்சரிக்கின்றனர். மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கல்வித்துறை மற்றும் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.