புதுடெல்லி: அயோத்தி ராமர் கோவிலுக்குப் பக்தர்கள் வழங்கிய காணிக்கை பணம் மற்றும் நகைகள் திருடப்பட்ட விவகாரத்தில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்த முறைகேடு குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உடனடியாக விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
முறைகேடு புகாரும் எஸ்.ஐ.டி விசாரணையும்: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள புகழ்பெற்ற ராமர் கோவிலில், சுவாமிக்கு பக்தர்கள் காணிக்கையாக அளித்த கோடி கணக்கான பணம் மற்றும் தங்கம், வெள்ளி நகைகள் மாயமானதாக அண்மையில் பெரும் புகார் எழுந்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதை அடுத்து, இது குறித்து விசாரிக்கச் சிறப்பு விசாரணைக்குழு (SIT) அமைத்து உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, ராமர் கோவில் அறக்கட்டளை மற்றும் வங்கியுடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய நபர்கள் உட்பட சுமார் 150-க்கும் மேற்பட்டோரிடம் எஸ்.ஐ.டி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட 20 பக்க இடைக்கால அறிக்கையை அரசு சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, முதற்கட்டமாக 8 பேர் மீது உத்தரப் பிரதேச காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், “அயோத்தி என்பது நமது சனாதன தர்மத்தின் அடையாளம். பொதுமக்களின் நம்பிக்கையோடு விளையாடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்; இதில் யாருக்கும் விதிவிலக்கு அளிக்கப்படாது” என்று எச்சரித்திருந்தார்.
பிரதமரின் மௌனம் ஏன்? – கெஜ்ரிவால் சாடல்: இந்நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்த வழக்கில் மத்திய பாஜாக அரசையும், பிரதமர் மோடியையும் மிகக் கடுமையாக விமரிசித்துப் பேசினார். அவர் கூறியதாவது:
“அயோத்தி ராமர் கோவிலுக்கு நிலம் வாங்கியது, கோவில் கட்டுமானம் மற்றும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான பக்தர்கள் வழங்கிய நன்கொடைகள், நகைகள் ஆகியவற்றில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றுள்ளது. இந்த விவகாரங்கள் மற்றும் முறைகேடுகள் பற்றிப் பிரதமருக்குத் தெரியாமல் இருந்திருக்கக் கூடும் என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஏனெனில், ராமர் கோவில் அறக்கட்டளையின் (Ram Mandir Trust) முக்கிய நிர்வாகிகள் அனைவரும் பிரதமராலேயே நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவர். மேலும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவரும் இந்த அறக்கட்டளையில் முக்கியப் பொறுப்பில் இடம்பெற்றுள்ளார். இவ்வளவு நெருக்கமான கண்காணிப்பு இருந்தும், இந்த பிரம்மாண்ட முறைகேட்டைத் தடுப்பதற்குப் பிரதமர் ஏன் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை? இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி ஏன் இன்னும் மௌனம் காக்கிறார்? அவர் உடனடியாக நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.”
உண்மையான குற்றவாளிகளை மறைக்க முயற்சி: தொடர்ந்து பேசிய கெஜ்ரிவால், “தற்போது இந்த வழக்கில் கீழ்மட்ட ஊழியர்கள் 8 பேரைக் கைது செய்திருப்பது வெறும் ஏமாற்று வேலை மற்றும் கண் துடைப்பாகும். இந்த 8 பேரும் வெறும் பகடைக்காய்கள் மட்டுமே. இதன் பின்னணியில் இருக்கும் உண்மையான குற்றவாளிகள் மற்றும் பெரும் புள்ளிகள் இன்னும் வெளியில் சொகுசாக இருக்கிறார்கள். பிரதமர் மோடி யாரைக் காப்பாற்றுகிறார்? எதற்காகக் காப்பாற்றுகிறார்? என்று நான் பகிரங்கமாகக் கேட்க விரும்புகிறேன்.
கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கையையும், உணர்வுகளையும் புண்படுத்தி, கடவுளின் காணிக்கையைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளை இடிப்பதற்கு, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஏன் இதுவரை புல்டோசர்களைப் பயன்படுத்தவில்லை?” என்று அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த அதிரடிப் பேட்டி தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.