உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் நிதிஷா. இவரது வீட்டில் பணியாளராகப் பணியாற்றி வந்த விமலா தேவி, ஓராண்டுக்கு முன்பு திருடப்பட்ட நகைகளுடன் இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் தோன்றியதால் காவல்துறையிடம் சிக்கியுள்ளார்.

சம்பவத்தின் பின்னணி நிதிஷாவின் வீட்டில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வைர மோதிரங்கள் மற்றும் தங்கச் சங்கிலி உள்ளிட்ட ஆபரணங்கள் காணாமல் போயின. அப்போது பணியாளராக இருந்த விமலா தேவி மீது சந்தேகம் எழுந்தாலும், அவர் தான் அப்பாவி போல நடித்து காவல்துறையிடமே புகார் அளிக்கச் சொல்லி நாடகமாடியுள்ளார். இதை நம்பிய நிதிஷா, அப்போது யாரையும் சந்தேகப்படவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

ரீல்ஸ் வீடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்த உண்மை நீண்ட நாட்களாக நகை கிடைக்காத நிலையில், கடந்த ஜூன் 29-ம் தேதி நிதிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோக்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது விமலா தேவியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்த வீடியோவில், தான் அணிந்திருந்த செயின் நிதிஷாவின் காணாமல் போன நகையைப் போலவே இருப்பதைக் கண்டார். மேலும், விமலாவின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸிலும் அதே நகைகள் இருப்பதை உறுதி செய்த நிதிஷா, உடனடியாக ராஜ்பூர் காவல்துறையிடம் ஆதாரங்களுடன் புகார் அளித்தார்.

விசாரணை மற்றும் கைது புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விமலா தேவியைப் பிடித்து விசாரித்ததில், அவரே நகையைத் திருடியதை ஒப்புக்கொண்டார். லக்கிம்பூர் கேரியைச் சேர்ந்த விமலா தேவி, வீட்டில் இருந்த நகைகளைக் கவனித்து வந்து, தக்க தருணத்தில் திருடியதும், தன் மீது சந்தேகம் வராதபடி தந்திரமாக நடித்ததும் விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் இருந்து சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான திருடப்பட்ட நகைகளைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சமூக வலைதளங்களில் பதிவிடும் ஆர்வத்தினால் திருட்டு விவகாரத்தில் சிக்கிய பணிப்பெண்ணின் செயல், அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.