ஐபிஎல் தொடரில் உலகின் முன்னணி பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்து, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தனது அதிரடி ஆட்டத்தால் வியக்க வைத்துள்ளார் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. இவரது துணிச்சலான பேட்டிங் அணுகுமுறை பலரின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் அதிரடி வீரர் மேத்யூ ஹைடன், இது குறித்த தனது விமர்சனத்தையும் எச்சரிக்கையையும் முன்வைத்துள்ளார்.
சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைல் குறித்துப் பேசிய மேத்யூ ஹைடன், “வைபவ் சூர்யவன்ஷியின் துணிச்சலான, எதையும் பொருட்படுத்தாத அணுகுமுறை பார்ப்பதற்கு மிகவும் அற்புதமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது. ஆனால், இவரைப் பார்த்துப் பின்பற்றும் மற்ற இளம் வீரர்கள் ஒரு முக்கியமான விஷயத்தைச் சிந்திக்க வேண்டும். இதுபோன்ற அதிரடி பாணியை சர்வதேச கிரிக்கெட்டில் நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து கடைப்பிடிப்பது சாத்தியமானதா? என்பதை ஆராய வேண்டும்” என்று கூறியுள்ளார்.
மேலும், சுப்மன் கில்லின் நேர்த்தியான பேட்டிங் பாணியையும், சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்தையும் ஒரே அணியில் இணைப்பது குறித்துக் கேட்டபோது, “நாம் இரண்டு முற்றிலும் மாறுபட்ட ஆளுமைகளைப் பற்றிப் பேசுகிறோம். கில் மற்றும் சூர்யவன்ஷி ஆகியோரின் பாணிகள் இணைந்து செயல்பட முடியுமா? நிச்சயமாக முடியும், ஏற்கனவே அவை இணைந்துதான் செயல்படுகின்றன. ஒரு அணியின் வெற்றிக்கு இத்தகைய மாறுபட்ட பாணிகள் அவசியம். கில் தனது சீரான திறனை சர்வதேச அளவில் ஏற்கனவே நிரூபித்துள்ளார். அதேபோல சூர்யவன்ஷியும் தனது திறமையை நிரூபிக்க வேண்டும்” என்றார்.
சர்வதேச கிரிக்கெட்டின் தரநிலை குறித்துப் பேசிய ஹைடன், “சர்வதேச கிரிக்கெட்டே விளையாட்டின் மிக உயர்ந்த தரநிலையாகக் கருதப்படுகிறது. அந்த உயரிய தளத்தில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவதுதான் ஒரு வீரரின் உண்மையான சவால். கில் ஏற்கனவே அதைச் செய்து வருகிறார். வைபவ் சூர்யவன்ஷியைப் போன்ற இளம் வீரர்கள் இந்த அதிரடி ஆட்டத்தைத் தொடர்ச்சியாகவும், அதே சமயம் சீராகவும் சர்வதேச போட்டிகளில் வெளிப்படுத்துவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போன்ற தொடர்களில் அதிரடி காட்டும் இளம் வீரர்கள், சர்வதேச அரங்கிலும் அதே வேகத்தையும் விவேகத்தையும் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதே ஹைடனின் கருத்தாக உள்ளது.