ராஜஸ்தானின் பாலோத்ரா மாவட்டம் பச்பத்ராவில், நாட்டின் முதல் கிரீன்ஃபீல்ட் ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். மேலும், பல முக்கிய வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அவர், பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை இந்தியா கையாண்ட விதம் குறித்து விளக்கமளித்தார்.
பிரதமர் மோடி தனது உரையில், “மேற்காசியாவில் நிலவும் நெருக்கடி சூழலால் சர்வதேச அளவில் எரிசக்தித் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு ஏற்பட்டது. அந்தச் சவாலான காலகட்டத்தில் இந்தியா தனது எரிசக்தி இறக்குமதி ஆதாரங்களை மிகத் திறம்பட விரிவுபடுத்தியது. நெருக்கடிக்கு முன்பு சுமார் 25 முதல் 26 நாடுகளில் இருந்து மட்டுமே எரிசக்தி இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், இந்தியாவின் ராஜதந்திர நகர்வுகளால் தற்போது 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது” என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால், கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.75,000 கோடிக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டது. எனினும், அந்தப் பொருளாதாரச் சுமையை மக்கள் மீது விழ விடாமல் மத்திய அரசு தடுத்து நிறுத்தியது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.10 வரை குறைத்ததன் மூலம், பணவீக்கத்தின் தாக்கத்திலிருந்து சாமானிய மக்களைப் பாதுகாத்தோம். இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோது, இந்தியாவுக்கு எதிராகப் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டன. இந்தியாவால் இந்த நெருக்கடியைச் சமாளிக்க முடியாது என்றும், பொருளாதாரம் தோல்வியடையும் என்றும் எதிர்பார்த்தவர்களுக்கு, தற்போதைய நிலை ஏமாற்றத்தைத் தந்துள்ளது” எனத் தெரிவித்தார்.
இந்தியா தற்போது உலகின் நான்காவது மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு திறன் கொண்ட நாடாக உருவெடுத்துள்ளது என்று சுட்டிக்காட்டிய பிரதமர், ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையிலான போர்ச் சூழலால் ஏற்பட்ட உரம் மற்றும் எரிபொருள் விநியோக பாதிப்புகளை மத்திய அரசின் நீண்டகால திட்டங்கள் மூலம் வெற்றிகரமாகச் சமாளித்ததாகக் குறிப்பிட்டார். இந்த பெட்ரோ கெமிக்கல் வளாகம் ராஜஸ்தானின் பொருளாதாரத்தை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், வேலைவாய்ப்புகளை உருவாக்கி, இந்தியாவின் எரிசக்தி சுதந்திரத்தை வலுப்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். அரசு எடுத்து வரும் தொடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், உலகளாவிய நெருக்கடிகளிலிருந்து இந்தியப் பொருளாதாரம் பாதுகாக்கப்படுவதாக அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.