சென்னை: தமிழ்நாட்டில் பதிவுத்துறையில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு முன்னோடி சீர்திருத்தமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘வருகையில்லா ஆவணப்பதிவு’ (Presenceless Registration) நடைமுறை குறித்து, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன் தலைமையில் சந்தேகங்களைத் தீர்க்கும் கலந்தாய்வுக் கூட்டமும், செயல்முறை விளக்கமும் சென்னை ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள அம்மா மாளிகை கலையரங்கத்தில் நடைபெற்றது.
அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற கூட்டம்: கட்டுமான விற்பனையாளர்கள் (Promoters), வங்கியாளர்கள் (Bankers) மற்றும் நிதி நிறுவனங்களின் (Financial Institutions) பிரதிநிதிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், புதிய நடைமுறை குறித்து எழுந்துள்ள சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டதுடன், வருகையில்லா பதிவு முறையின் செயல் விளக்கக் காட்சியும் (Demo) திரையிடப்பட்டது.
இக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன், தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றது முதல் மக்களின் தேவைகளைத் துரிதமாக நிறைவேற்றும் அரசாகச் செயல்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டினார். அரசு சேவைகளை மிகவும் எளிமையாகவும், விரைவாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக அனைத்துத் துறைகளிலும் தகவல் தொழில்நுட்பம் திறம்படப் பயன்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 17 முதல் கட்டாய நடைமுறை: பதிவுத்துறையில் செய்யப்பட்டுள்ள இந்தப் புதிய சீர்திருத்தத்தின் முதற்கட்டமாக, மனை முதல் விற்பனை (First Sale of Plot) மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு முதல் விற்பனை (First Sale of Flat) ஆகிய இரண்டு வகையான ஆவணப் பதிவுகள் வருகிற 17.08.2026 முதல் கட்டாயமாக வருகையில்லா ஆவணப்பதிவு முறையில் மட்டுமே மேற்கொள்ளப்பட உள்ளன என்று அமைச்சர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்த நவீன முறையின் மூலம், ஆவணப் பதிவு செயல்முறை மிகவும் விரைவாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் மாறுவதோடு, பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் பாதுகாப்பான முறையில் சம்பந்தப்பட்ட நபரின் மின்னஞ்சல் முகவரிக்கே நேரடியாக அனுப்பி வைக்கப்படும். இதனால் பொதுமக்களுக்கு வீண் அலைச்சலும், நேர விரயமும், பயணச் செலவும் முழுமையாகக் குறைவதுடன், பதிவுச் சேவையின் தரமும் செயல்திறனும் பன்மடங்கு மேம்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
பங்குதாரர்களின் ஒத்துழைப்பு: கட்டுமான நிறுவனங்கள், மேம்பாட்டாளர்கள் மற்றும் வங்கிகள் ஆகியவை இந்தப் புதிய திட்டத்தின் மிக முக்கியமான பங்குதாரர்களாகச் செயல்படுகின்றன. புதிய நடைமுறையைக் கையாளும் விதம், தேவையான ஆவணங்கள், மின்னணு முறையில் சமர்ப்பிக்கும் முறை மற்றும் பதிவு செயல்முறையின் ஒவ்வொரு கட்டம் குறித்தும் இன்றைய கூட்டத்தில் விரிவான பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் ஆவணங்களில் ஏற்படக்கூடிய பிழைகள் தவிர்க்கப்பட்டு, பதிவுப் பணிகள் மிகவும் செம்மையாக நடைபெறும்.
அரசின் இந்த முன்னோடியான மக்கள் நலத் திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தத் தனியார் துறைகளும், பொதுமக்களும் முழுமையான ஒத்துழைப்பை நல்க வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில் வணிகவரி, பதிவுத்துறை மற்றும் அறநிலையங்கள் துறைச் செயலாளர் ஜெ.குமரகுருபரன், பத்திரப் பதிவுத்துறை தலைவர் ஜி.கே.அருண் சுந்தர் தயாளன் மற்றும் கூடுதல் பதிவுத்துறை தலைவர்கள் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் பலர் உடனிருந்து சிறப்பித்தனர்.