சென்னை:

தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு காரணமாக மக்கள் குடிநீருக்காக வீதிகளில் இறங்கிப் போராடும் அவல நிலை தொடர்வது மிகுந்த கவலை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மக்களின் தாகம் தீர்க்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயிலின் தாக்கம் மற்றும் போதிய மழையின்மையால் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் அனைத்தும் முற்றிலும் வறண்டு போய்விட்டன. இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்துள்ளதால், பொதுமக்கள் குடிநீருக்காகத் திண்டாடி வருகின்றனர். கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களின் பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. மக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீருக்காகக் காலி குடங்களுடன் வீதிகளில் இறங்கிப் போராடும் அவல நிலை தொடர்ந்து வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

இந்தக் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினையை எதிர்கொள்வதற்குத் தவெக அரசு எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கத் தவறியுள்ளது. அரசின் முறையான திட்டமிடல் இன்மையே இன்று மக்கள் குடிநீரின்றி தாகத்தில் தவிப்பதற்குக் மிக முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தவுடன் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை மறந்துவிட்டு மெத்தனப் போக்கில் செயல்பட்டு வரும் முதல்வர் விஜய்யின் இந்தச் செயலை வன்மையாகக் கண்டிப்பதாக நயினார் நாகேந்திரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இனியாவது அரசு தன் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு, பொதுமக்களின் தாகத்தைத் தணிப்பதற்கான உடனடி நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்க வேண்டும். குறிப்பாக, குடிநீர் தட்டுப்பாடு அதிகம் நிலவும் பகுதிகளில் அவசர கால அடிப்படையில் ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பது மற்றும் லாரிகள் மூலம் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது போன்ற உடனடித் தீர்வுகளை உடனே செயல்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், எதிர்வரும் பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே போர்க்கால அடிப்படையில் ஏரி, குளங்கள் மற்றும் நீர்நிலைகளைத் தூர்வாரும் பணிகளைத் தொடங்க வேண்டும். மழைக்காலங்களில் வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீரைச் சேமித்து வைக்கும் வகையில், ஆங்காங்கே சிறு தடுப்பணைகளைக் கட்டவும் இந்த அரசு உடனடியாக முன்வர வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது அறிக்கையின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார். குடிநீர் போன்ற அத்தியாவசியத் தேவைகளில் அரசு உடனடியாகத் தலையிட்டு மக்களின் துயரத்தைத் துடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.