சென்னை:

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை அடிமட்ட அளவில் பலப்படுத்தும் மற்றும் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாணிக்கம் தாகூர் மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியான மாற்றங்களை கொண்டுவரும் திட்டத்தின் முதல் கட்டமாக, ஏற்கனவே மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் முழுமையாக சீரமைக்கப்பட்டு புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய தலைவர்களுக்கு சிறப்பு புத்தாக்க பயிற்சி முகாம்களும் நடத்தப்பட்டன. இந்த முகாமில் காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவரான ராகுல் காந்தி நேரில் கலந்துகொண்டு புதிய நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தற்போது, இந்த இயக்க சீரமைப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளன. இதன் கீழ், தமிழகம் முழுவதும் உள்ள வட்டார, நகர மற்றும் பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டிகளும், மாநகராட்சிப் பகுதிகளில் செயல்படும் சர்க்கிள் மற்றும் வட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் முழுமையாக சீரமைக்கப்படவுள்ளன.

குறிப்பாக, தமிழகத்தில் உள்ள ஏறக்குறைய 75,000 வாக்குச்சாவடிகளை மையமாகக் கொண்டு புதிய வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பத்து வாக்குச்சாவடிகளுக்கும் சேர்த்து ஒரு மண்டல காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்ற அடிப்படையில், தமிழகம் முழுவதும் சுமார் 7,500 மண்டல காங்கிரஸ் தலைவர்கள் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். இதன் மூலம் கட்சியின் கட்டமைப்பு அடிமட்டத் தொண்டர்கள் வரை பலப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டாம் கட்ட இயக்க சீரமைப்புப் பணிகளை முழுமையாக ஒருங்கிணைத்து வழிநடத்த, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஒரு சிறப்புக் ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சா.பீட்டர் அல்போன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினர்களாக கே.சிரஞ்ஜீவி, கே.தணிகாசலம், என்.அருள்பெத்தையா, எஸ்.டி.நெடுஞ்செழியன், முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.எம்.பழனிச்சாமி மற்றும் வி.ஆர்.சிவராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட அளவில் மேற்கொள்ளப்படும் இந்தப் பணிகளை, மாவட்ட தலைவர்களுடன் இணைந்து மிகச் சிறப்பாகச் செயல்படுத்தும் வகையில், தமிழகத்தில் உள்ள 74 கட்சி மாவட்டங்களுக்கும் இயக்கப் பணிகளில் நீண்ட கால அனுபவம் கொண்ட 74 முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் பார்வையாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர். இந்த அதிரடி மாற்றங்கள் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலுவான தேர்தல் சக்தியாக மாற்றும் என்று அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது.