திருப்பத்தூர்: திருப்பத்தூரில் உள்ள தமிழ்நாடு வனத்துறைக்குச் சொந்தமான அரசு கிடங்கில் இருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் திருடுபோன பெரிய அளவிலான சர்ச்சையைத் தொடர்ந்து, பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த 5 வன அலுவலர்கள் அதிரடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

அரசு கிடங்கில் செம்மரக்கட்டைகள் திருட்டு: திருப்பத்தூர் பகுதியில் தமிழ்நாடு வனத்துறைக்குச் சொந்தமான பாதுகாக்கப்பட்ட அரசு சந்தன மர மற்றும் செம்மர விற்பனை கிடங்கு ஒன்று இயங்கி வருகிறது. சட்டவிரோதக் கடத்தல் மற்றும் பல்வேறு செம்மர வழக்குகளில் காவல் துறையினர் மற்றும் வனத்துறையினரால் பறிமுதல் செய்யப்படும் செம்மரக்கட்டைகள் அனைத்தும் பாதுகாப்பான முறையில் இந்த கிடங்கில்தான் கொண்டு வந்து சேமித்து வைக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில், கடந்த காலங்களில் பல்வேறு கடத்தல் வழக்குகளில் கைப்பற்றப்பட்ட அதிமதிப்புள்ள 55 செம்மரக்கட்டைகள் இந்தக் கிடங்கில் பத்திரமாகப் பாதுகாத்து வைக்கப்பட்டு இருந்தன. மொத்தம் 1,750 கிலோ (1.75 டன்) எடையைக் கொண்ட இந்தக் கட்டைகளின் சந்தை மதிப்பு சுமார் 50 லட்சம் ரூபாய் ஆகும். இவ்வளவு பாதுகாப்பு மிகுந்த அரசுப் பகுதிக்குள் செம்மரக்கட்டைகள் திருடுபோயிருப்பது வனத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

5 வன அலுவலர்கள் சஸ்பெண்டு: அரசு கிடங்கின் பாதுகாப்பில் கடுமையான குறைபாடுகள் இருப்பதும், அதிகாரிகளின் முறையான கண்காணிப்பு இல்லாததே இந்தத் திருட்டிற்குக் காரணம் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பாதுகாப்புப் பணியில் அலட்சியமாக இருந்ததாகவும், உரிய முறையில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளவில்லை என்றும் குற்றச்சாட்டப்பட்ட 5 வன அலுவலர்களை உயர் அதிகாரிகள் உடனடியாக பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து உத்தரவிட்டுள்ளனர்.

இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு கிடங்கில் இருந்து இவ்வளவு பெரிய அளவில் செம்மரங்கள் எப்படி வெளியே கடத்தப்பட்டன? இதில் கிடங்குப் பணியாளர்கள் அல்லது வெளிநபர்களுக்குத் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் இரகசிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அரசு சொத்துக்கள் பாதுகாப்புப் பணியில் தொடர்ந்து இதுபோன்ற தொய்வு ஏற்படுவதைத் தடுக்கக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.