நீட் தேர்வு விவகாரத்தில் தீவிரமடையும் போராட்டம்: “இந்திய மாணவர்களின் கைகளோடு கைகோர்த்து நிற்கிறேன்” – இயக்குநர் மாரி செல்வராஜ் உருக்கம்!

சென்னை: நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு விவகாரங்கள், இந்திய அளவில் மாணவர்களிடையேயும் ஜனநாயக சக்திகளிடையேயும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. நீட் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும், நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி புதுடெல்லி ஜந்தர் மந்தரில் பல்வேறு அமைப்புகள் மற்றும் மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சூழலில், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தடியடியைக் கண்டித்தும், மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான மாரி செல்வராஜ் தனது முழு ஆதரவைப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

டெல்லி போராட்டம் மற்றும் தடியடி பின்னணி: கடந்த சில நாட்களாக ஜந்தர் மந்தரில் அமைதியான வழியில் நடைபெற்று வந்த போராட்டம், நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்றபோது தீவிரமடைந்தது. நாடு முழுவதிலும் இருந்து திரண்ட ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்களைக் கட்டுப்படுத்தப் காவல்துறையினர் அமைத்த தடுப்பு வேலிகளை மீறிப் பேரணி முன்னேறியது.

இதையடுத்து, கூட்டத்தைக் கலைக்கக் காவல்துறையினர் கண்மூடித்தனமாகத் தடியடி நடத்தியதுடன், கண்ணீர்ப் புகைக்குண்டுகளையும் வீசினர். இதில் பல மாணவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இந்த வன்முறைச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பலரும் மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.

இயக்குநர் மாரி செல்வராஜின் அதிரடி அறிக்கை: ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’ மற்றும் ‘பைசன்’ போன்ற சமூக நீதியைப் பேசும் அழுத்தமான திரைப்படங்களின் மூலம் இந்திய அளவில் கவனம் ஈர்த்த பிரபல இயக்குநர் மாரி செல்வராஜ், மாணவர்களின் இந்தப் போராட்டத்திற்குத் தனது சமூக வலைதளப் பக்கம் வாயிலாக ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிகார அடக்குமுறைக்கு எதிரான குரல் எத்திசையில் இருந்து ஒலித்தாலும், அத்திசைக்கு பெரும் நம்பிக்கையையும் வலிமையையும் சேர்ப்பதே என் கலையின் நேர்மை என்பதை உறுதியாக நம்புகிறேன். நீட் எனும் ஆணவப் போக்கிற்கு எதிராக ஆவேசமாகக் களமாடும் அத்தனை இந்திய மாணவர்களின் கைகளோடு கைகோர்த்து நிற்கிறேன்” என்று உணர்ச்சிப்பூர்வமாகப் பதிவிட்டுள்ளார்.

வலுவடையும் ஆதரவு குரல்கள்: ஏற்கனவே தமிழ் திரையுலகைச் சேர்ந்த பா.ரஞ்சித், வெற்றிமாறன், சத்யராஜ் உள்ளிட்டப் பல பிரபலங்கள் சென்னையில் வீதியில் இறங்கி போராட்டம் நடத்திய நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜின் இந்தத் தெளிவான ஆதரவுப் பதிவு, போராடும் மாணவர்களிடையே புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சமூகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகத் தனது திரைப்படங்கள் மூலமாகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் மாரி செல்வராஜ், தற்போது நிஜ வாழ்விலும் மாணவர் நலனுக்காகக் குரல் கொடுத்துள்ளது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.