புதிய தமிழகம் கட்சியின் முன்னெடுப்பில், மேகதாது அணை கட்டும் முயற்சியைத் தடுத்து நிறுத்தவும், ஆண்டுதோறும் காவிரி நதிநீர் பங்கீட்டைத் தடையின்றிப் பெற்றிடவும் தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள ஹோட்டல் அக்கார்டு மெட்ரோபாலிட்டன் அரங்கில் இன்று காலை 11 மணிக்கு வெற்றிகரமாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகத்தின் உரிமை மற்றும் நலன்களைக் காக்கும் வகையில் பல முக்கியத் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானங்களின் விவரம்:

1. கர்நாடக அரசுக்குக் கண்டனம்: காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்கு மாறாக, தமிழகத்தின் உரிையைப் பாதிக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் பிடிவாதப் போக்குக்கு இக்கூட்டம் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

2. டெல்டா மாவட்டங்களின் அவல நிலை: மே, ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்திற்குத் திறந்துவிட வேண்டிய 40 டி.எம்.சி அளவு காவிரி நீரை கர்நாடக அரசு திறக்க மறுத்துள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலையும், தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டு பொதுமக்கள் தினமும் சாலைகளில் போராடும் அவல நிலை உருவாகியுள்ளது. மேலும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையைக் கர்நாடக அரசு உதாசீனப்படுத்துவதையும், நேரத்தை வீணடிக்கும் தமிழக அரசையும் இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

3. தமிழகத்திற்குத் தலைகுனிவு: தமிழக முதல்வர் ஆர்வம் காட்டியும், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் “இன்னொரு சந்திப்பில் சந்திக்கலாம்” எனக் கூறியுள்ளது தமிழகத்திற்குப் பெரும் தலைகுனிவாக இக்கூட்டம் கருதுகிறது.

4. பிரதமரைச் சந்திக்க வலியுறுத்தல்: எட்டு கோடி தமிழக மக்களின் காவிரி நதிநீர் உரிமையை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்கக் கூடாது. சிறிதும் காலம் தாழ்த்தாமல், இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளையும் அழைத்துக்கொண்டு டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து, மேகதாது அணை விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், காவிரி நீர் தடையின்றி கிடைக்கவும் உரிய அழுத்தம் கொடுக்க வேண்டுமென்று தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

5. ஆகஸ்ட் 7-ல் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்: காவிரி பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவும், அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி சென்னையில் முதற்கட்டமாக மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என இக்கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.