தமிழ்நாட்டின் உரிமையான காவிரி நீரைக் கூட திறக்க மறுக்கும் கர்நாடக அரசுக்கு, தமிழ்நாட்டின் வளமான விவசாய நிலங்களை அழித்து எண்ணெய் குழாய் அமைத்துக் கொடுக்கும் அநீதியைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என்று கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் எழுப்பிய கேள்விகள் மற்றும் கருத்துகளின் விவரம் வருமாறு:
தமிழகத்தின் உரிமைகளை மதிக்காத பிற மாநிலங்களின் தேவைகளுக்காக, தமிழ்நாட்டின் இயற்கை வளங்களையும் விவசாய வளங்களையும் பலியிடும் போக்கை இனியும் தொடர அனுமதிக்க முடியாது. கனிம வளங்கள் கட்டுப்பாடின்றி பிற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதைத் தடுத்து இயற்கை வளங்களைப் பாதுகாக்கக் கையாண்ட அதே நிலைப்பாடு, விவசாய நிலங்களைப் பாதுகாப்பதற்கும் வழங்கப்பட வேண்டும். பிற மாநிலங்களுக்காகக் கனிம வளங்களைச் சுரண்ட அனுமதிக்கக் கூடாதென்றால், விவசாய நிலங்களையும் அழிக்க அனுமதிக்கக் கூடாது.
பாரத் பெட்ரோலியம் நிறுவனம் கோவை மாவட்டம் இருகூரிலிருந்து கர்நாடக மாநிலம் தேவனகுந்தி வரை எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இதில் முத்தூரிலிருந்து கர்நாடக எல்லை வரை நெடுஞ்சாலை ஓரமாகக் குழாய்கள் பதிக்கப்படும் நிலையில், இருகூரிலிருந்து முத்தூர் வரையிலான சுமார் 70 கி.மீ தொலைவுக்கு மட்டும் விவசாயிகளின் எதிர்ப்பை மீறி விளைநிலங்களைத் தோண்டி குழாய் பதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத அநீதியாகும்.
-
நெடுஞ்சாலை வழியாகக் கொண்டு செல்ல முடியும் என்றால், விவசாய நிலங்களை ஏன் சிதைக்க வேண்டும்?
-
கர்நாடகாவுக்கு எண்ணெய் கொண்டு செல்ல தமிழனின் வயல்தான் பாதையா?
-
நாளை எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டால் நஞ்சான மண்ணை மீண்டும் உயிர்ப்பிக்க முடியுமா? மாசடைந்த நிலத்தடி நீரை மீட்டெடுக்க முடியுமா?
-
பல தலைமுறைகள் உழைத்து உருவாக்கிய விளைநிலத்தை மீண்டும் உருவாக்க முடியுமா?
கேரளாவுக்காகத் கனிம வளங்களை எடுத்துச் செல்லக் கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு. அதேபோல், கர்நாடகாவுக்காக விவசாய நிலங்களையும் அழிக்கக் கூடாது. எனவே, கனிம வளங்களைப் பாதுகாப்பது போலவே விவசாய நிலங்களைப் பாதுகாக்கவும் தெளிவான கொள்கை முடிவை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.
பாரத் பெட்ரோலியம் நிறுவனம் விவசாய நிலங்கள் வழியாக மேற்கொள்ளும் பணிகளை உடனடியாக நிறுத்திவிட்டு, ஏற்கனவே பயன்படுத்தப்படும் நெடுஞ்சாலை வழித்தடத்திலேயே முழு திட்டத்தையும் மாற்ற தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.