திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தன் மீதான வழக்குகளைச் சட்டப்பூர்வமாக எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறியதாவது: சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பான வழக்கில் புகாரிலும் எனது பெயர் இல்லை; எஃப்.ஐ.ஆரிலும் என் பெயர் இல்லாத நிலையிலும் எனது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்காக முன் ஜாமீன் பெற்று காவல் நிலையத்தில் தொடர்ந்து காலையும் மாலையும் கையெழுத்திட்டு வருகிறேன். லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதலாக ஒரு வழக்கைப்பதிவு செய்து, நான் தங்கியிருந்த அறைகளிலும் பல்வேறு இடங்களிலும் சோதனை நடத்தி வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெறுவதற்காக மூத்த வழக்கறிஞர்களுடன் கலந்து ஆலோசித்தேன்.

இதனால் காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி விசாரணை அதிகாரிக்குக் கடிதம் அனுப்பியிருந்தேன். சென்னை உயர் நீதிமன்றத்திலும் நேற்று அதற்கான மனு தாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியதை அடுத்து, தொடர்ந்து காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறேன்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் பெயர் மட்டுமே எஃப்.ஐ.ஆரில் உள்ளது; மற்றொருவர் பெயர் எஃப்.ஐ.ஆரிலேயே இல்லை. இருப்பினும் அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். நாங்கள் இந்த வழக்கைச் சட்டப்படி எதிர்கொள்ள முழுமையாகத் தயாராகி வருகிறோம். வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ஆக்கப்பூர்வமான ஒரு அரசு என்பது மக்களின் அடிப்படை கோரிக்கைகளையும் தேவைகளையும் நிறைவேற்றும் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தும். ஆனால், தவெக அரசு எங்கள் மீது தொடர்ந்து வழக்குகள் போடுவதில் மட்டுமே தீவிர முனைப்பு காட்டி வருகிறது. எங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துரைக்க நீதிமன்றம் உள்ளது. எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் அவற்றை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொண்டு, இந்த வழக்குகள் அனைத்தும் பொய்யானவை என்பதை நிரூபித்துக் காட்டுவோம் என்றார்.